உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி: ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட கூறி முதியவரை தாக்கிய கும்பல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் `ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட வலியுறுத்தி, முதியவரை தாக்கி, தாடியை வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.   உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த முதியவர் அப்துல் சமத். இவர் தொழுகைக்காக மசூதி செல்லும் வழியில், சிலர் `லிப்ட்’ கொடுப்பதாக கூறி ஆட்டோவில் ஏற்றினர். ஆட்டோ சிறிது தூரம் சென்றதும் மேலும் 2 பேர் ஆட்டோவில் ஏறினர். அங்கிருந்து அவரை அழைத்து சென்ற கும்பல் அவரது மொபைல் போனை பறித்து கொண்டு, தனியறையில் அடைத்து வைத்தது. அவரை அடித்து துன்புறுத்திய அவர்கள், வேறு சிலரை தாக்கிய வீடியோக்களை காட்டி மிரட்டி உள்ளனர். கும்பலில் இருந்த ஒருவன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து முதியவரின் தாடியை வெட்டினான்.

சம்பவம் குறித்து தாக்கப்பட்ட முதியவர் அப்துல் சமது கூறுகையில், ``ஜெய் ஸ்ரீராம், வந்தே மாதரம் என்று கோஷமிடுமாறு வற்புறுத்தினர். எனது மொபைல் போனை பறித்து கொண்டு, தாடியை வெட்டினர்,’’ என்று கண்ணீர் மல்க கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பர்வேஷ் குஜ்ஜாரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய சிலரை தேடி வருகின்றனர்.

பசு கடத்துவதாக அடித்துக்கொலை

மத்தியப்பிரதேசம் அச்சால்பூரை சேர்ந்தவர் பாபு லால் பில். இவரும் மற்றொருவரும் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளனர். சித்தோர்கர் என்ற இடத்தில் இருவரும் பசுக்களை ஏற்றிக்கொண்டு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. இருவரையும் பசுக்களை கடத்துவதாக கூறி கண்மூடித்தனமாக கும்பல் அடித்து நொறுக்கி உள்ளது. பாபு லால் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.  மற்றொரு நபர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: