2 கோடி மதிப்பு நிலத்தை 18.5 கோடிக்கு வாங்கியது அம்பலம் ராமர் கோயில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல்: பத்தே நிமிடத்தில் பல கோடி விலை அதிகரித்த மர்மம்: அறக்கட்டளை பொதுச்செயலாளர் மீது பரபரப்பு புகார்

லக்னோ:  உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வளாகத்திற்கு நிலம் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2 கோடி மதிப்பிலான நிலம் பத்தே நிமிடத்தில் 18.5 கோடி என அதிக விலை கொடுத்து அறக்கட்டளை பொது செயலாளர்  மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ராம ஜென்மபூமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, ராமர் கோயில் கட்ட 15 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை பிரதமர் மோடி நடத்தினார். இதனைத் தொடர்ந்து ராமர் கோயிலுக்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை  தலைமையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராமர் கோயில் வளாகத்துக்கு நிலம் வாங்கியதில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா  அறக்கட்டளை  முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்   மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர்  பவன் பாண்டே ஆகியோர்,  ராமர் கோயில் அறக்கட்டளையானது  கோயிலுக்கு ₹2கோடி மதிப்புள்ள இடத்தை 18.5கோடிக்கு வாங்கி மோசடி செய்துள்ளதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.  அறக்கட்டளை  பொது செயலாளர் சம்பத் ராய் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆவணத்தில், 1.208 ஹெக்டேர் நிலத்தை அதன் உண்மையான உரிமையாளர் குசும் பதக் என்பவரிடம் இருந்து கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி 2 கோடிக்கு வாங்கி பத்தே நிமிட இடைவெளியில் அதே நிலத்தை 18.5 கோடிக்கு சுல்தான் அன்சாரி என்பவர் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்றிருக்கிறார் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவுத்துறை தரவுகளின் படி இந்த நிலத்தின் சந்தை மதிப்பு வெறும் 5.7 கோடி மட்டுமே.

ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா மற்றும் அயோத்தி நகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா ஆகிய இருவரும் சாட்சிகளாக இவ்விரு ஆவணங்களிலும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இந்த நிலத்தை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்ற சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி என்பவருடன் இணைந்து கூட்டாக அயோத்தியில் நிலம் வாங்கி விற்கும் இடைத்தரகராக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா, ரவி மோகன் திவாரியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலத்தை பத்து நிமிடத்தில் 18.5 கோடிக்கு வாங்கியதன் மூலம் அறக்கட்டளைக்கு 16.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென சஞ்சய் சிங் கூறி உள்ளார். இதேபோல் சமாஜ்வாதி  முன்னாள் எம்எல்ஏ  பாண்டே கூறுகையில், “  நிலத்தை வாங்குவதற்காக முதலில் வாங்கப்பட்ட   பத்திர தாள்  மாலை 5.11 மணிக்கும் அடுத்த பத்திர தாள் 5.22 க்கும் வாங்கப்பட்டுள்ளது” என்றார். இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்

காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில், ‘‘இது பக்தர்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயல். இது குறித்து பிரதமர் மோடி வாய் திறந்து பதில் சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த ஊழல் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்’’ என்றார். உபி துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறுகையில், ‘‘ராமர் கோயில் விவகாரத்தில் நேர்மறையான தகவல்கள்  வருவதை விரும்பாதவர்கள், ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதி ராம ஜென்மபூமியை அவமதிக்கும் வாய்ப்பை தவற விடுவதில்லை’’ என்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘கடவுள் ராமர் நீதி, உண்மைக்கு நிகரானவர். அவரது பெயரில் ஏமாற்றுவது அநீதி’’ என்று பதிவிட்டுள்ளார்.

அறக்கட்டளை மறுப்பு

ராம ஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் நிலத்தை வாங்கியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த விலையில் நிலத்தின் சொந்தக்காரர்கள் கடந்த மார்ச் மாதம் நிலத்தை விற்று பத்திரத்தை பதிவு செய்தனர். அதன் பிறகு அறக்கட்டளையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தியை கொன்றதாக எங்கள் மீது பழி போட்டுள்ளனர். எனவே குற்றச்சாட்டுக்களை பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம்’’ என்றார்.

Related Stories: