ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலி மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது குறித்தும் பேசுகிறார்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.  தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதையடுத்து கடந்த வாரம் முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக நேற்று (14ம் தேதி) முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காய்கறி, பலசரக்கு, தேநீர், சலூன், இனிப்பு, கார வகை கடைகள், டாஸ்மாக் கடைகள் திறக்கலாம், காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்காக பூங்காவை திறக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் படிபடிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

ஆனாலும், பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே செல்லும்போது, அலுவலகம் செல்லும்போது, கடைகளுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைக்காட்சியில் பேசும்போது கூட, ” கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் திரும்ப பெறப்படும்” என்றும் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின்போது, ”தமிழகத்தில் நேற்று முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், அலுவலகங்களில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட கலெக்டர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அதிகாரிகளை அனுப்பி அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் கொரோனா தொற்று பரவல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட உள்ளார். மேலும், தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி பதவிக்கு வந்து சுமார் 40 நாட்களே ஆகி உள்ளது. இந்த 40 நாட்களும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் மக்கள் நல திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் புதிய கலெக்டர்கள் மற்றும் துறைகளிலும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஏற்கனவே தங்கள் மாவட்டங்களில் நடைபெற்று முடியாமல் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், தங்கள் பகுதியில் மக்கள் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களிடம் பேச திட்டமிட்டுள்ளார்.

Related Stories:

>