சென்னை: திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராவதற்காக பதிவு செய்ய விண்ணப்பித்தவர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி முதல் தவணையாக ₹2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிட கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குடும்ப அட்டை வைத்திருக்கும் 2 ஆயிரத்து 596 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு அரசின் 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவியின் முதல் தவணை வழங்கப்பட்டுள்ளது என்றும் குடும்ப அட்டை இல்லாத 8 ஆயிரத்து 493 மூன்றாம் பாலினத்தவருக்காக திருநங்கைகள் நல வாரியம் மூலமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.