வீடுகள், கழிவறைகள் கட்டியதாக போலிஆவணம் தயாரித்து 5 கோடி முறைகேடு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  திருவாரூர் மாவட்டம் தலையமங்கலத்தை சேர்ந்த அமிர்தவள்ளி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  பிரதம மந்திரி அவாஜ் யோஜனா மற்றும் ஸ்வச் பாரத் திட்டத்தின்கீழ் தலையமங்கலம் கிராமத்திற்கு 144 வீடுகளும் 433 கழிவறைகளும் கட்டுவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. தலையமங்கலம் பஞ்சாயத்து செயலாளராக ராஜ்மோகன் என்பவரை தமிழக அரசு நியமித்தது.  ராஜ்மோகனின் தம்பியான மேலக்காட்டை சேர்ந்த பாஸ்கருக்கு வீடுகள் மற்றும் கழிவறைகளை கட்டும் பணியை ஒப்பந்த விதிகளை எதுவும் கடைபிடிக்கப்படாமல் கொடுத்தனர். எந்த கட்டுமானத்தையும் செய்யாமல் போலியான ஆவணங்களை தயார் செய்து திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் ₹5 கோடிவரை முறைகேடு செய்துள்ளனர். இந்த மோசடி குறித்து விசாரிக்க பொன்னியின் செல்வன் என்பவரை திருவாரூர் கலெக்டர் நியமித்தார். அவரும் கலெக்டருக்கு அறிக்கை அளித்தார். ஆனால், அந்த அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.

 வீடுகள், கழிவறைகள் எதுவும் கட்டாமல் 5 கோடியை முறைகேடாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நான் கடந்த ஏப்ரல் 10ம் தேதி மீண்டும் தமிழக அரசுக்கு மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  எனவே, பிரதம மந்திரி அவாஜ் யோஜனா மற்றும் ஸ்வச் பாரத் திட்டத்தின்கீழ் எங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் மற்றும் கழிவறைகளை பயனாளிகளுக்கு கட்டித்தருமாறு தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல்கள் ஜி.கிருஷ்ணராஜா, ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 3 வாரங்களில் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

Related Stories:

>