×

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டு அதிமுகவை அபகரிக்க வஞ்சக வலை விரிக்கும் சசிகலா: எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டு, அதிமுகவை  அபகரித்து விடலாம் என்று சசிகலா தினமும் வஞ்சக வலை விரிப்பதாக சென்னையில்  நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பகிரங்க குற்றச்சாட்டை  தெரிவித்துள்ளனர். அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் மற்றும்  கொறடாவை தேர்வு செய்வதற்காக, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.  கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: எம்ஜிஆர்  மறைவுக்கு பின்னர், மீண்டும் அதிமுகவை உலகம் புகழும் இயக்கமாக்கி  காட்டியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பின்னர் ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு  செய்திருக்கிறோம்.

தேர்தலை சந்தித்த திமுக மற்றும் எதிர் அணி, சட்டமன்ற  தேர்தலில் மிக குறைந்த வாக்கு சதவீதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.  அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதான  எதிர்க்கட்சியாக, அதிமுகவின் 66 எம்எல்ஏக்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக  சட்டமன்றத்தில் உரக்க குரல் எழுப்பி, உண்மை மக்கள் தொண்டர்களாக பணியாற்ற  துடித்துக்கொண்டிருக்கின்றனர்.  உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும்,  நற்பெயரை அழிக்கும் நச்சு களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர்  அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக்  கொண்டிருக்கின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து  ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா, இப்போது அதிமுக இவ்வளவு வலுவும்,  பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதை  பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள, கட்சியை அபகரிக்கும்  முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன்  பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு  நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு  மாறாகவும், கட்சியின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக  இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என கடந்த மாதம் 23ம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக  தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில்  உரையாடி, அதிமுகவின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் இழுக்கும், பழியும்  தேடியவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இனி  அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும்  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் மூத்த நிர்வாகிகளை வலியுறுத்தி கேட்டுக்  கொள்கிறோம். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி  பழனிசாமி ஆகியோர் முன்மொழிந்தனர். அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும்  வழிமொழிந்துள்ளனர்.

Tags : Sasikala ,EPS ,OPS , Sasikala spreads deceptive web to extort AIADMK after announcing withdrawal from politics: EPS, OBS publicly accuse MLAs at meeting
× RELATED அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள்...