×

முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு அறிவித்துள்ள கொரோனா கால ஊரடங்கு தளர்வு வழிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும்  வணக்கம். உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்ற பெருந்தொற்று ஒரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 36,000 ஆக இருந்தார்கள். இது 50,000 ஆகும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

 ஆனால் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 15,000க்கும் கீழ் குறைந்துகொண்டு வருகிறது. கட்டளை மையம் என்ற வார் ரூமுக்கு உதவிகள் கேட்டு வருகின்ற தொலைபேசி அழைப்புகளும் குறைந்துவிட்டது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம். ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முறையாகவும், முழுமையாகவும் கடைபிடித்ததால்தான், இந்த அளவிற்குக் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. எனவே, விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துகொண்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஊரடங்கை இன்னும் ஒருவாரக் காலத்திற்கு நீட்டித்து அறிவியுங்கள் என்று  பொதுமக்களிடமிருந்தே கோரிக்கை வந்தது. அரசும் மக்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பது மட்டுமல்ல, மக்களுடைய எண்ணங்களைத்தான் அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

என்னதான் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதை மக்கள் பின்பற்றினால்தான் முழு வெற்றி சாத்தியம் ஆகும். விதிகளை மக்கள் பின்பற்றுவதால்தான் தொற்று பரவல் குறைந்தது. அதேபோன்ற எச்சரிக்கை உணர்வோடு மக்கள் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்று தான் சொன்னேனே தவிர, முழுமையாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லவில்லை. மக்கள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  அரசும், மக்களுடைய நெருக்கடியை உணர்ந்திருக்கின்ற காரணத்தினால்தான் கொரோனா தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் சில தளர்வுகளை கொடுத்திருக்கிறோம். சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம் என்றார். முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவருடன் பேசிய மக்கள் ஊரடங்கு தளர்வுக்கு நன்றி தெரிவித்தனர்.

கடை நடத்தும் பொதுமக்கள்: கொரோனா காலத்தில் எங்கள் வாழ்வாதாரமே இல்லாமல் வீட்டில் இருந்தோம். அதனால் இப்போது முதலமைச்சர் கடை வைக்கலாம் என்று சொன்னதால் கொரோனா விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நாங்கள் நல்லபடியாக கடையை நடத்துகிறோம். முதலமைச்சருக்கு நன்றி. தமிழக முதலமைச்சருக்கு வணக்கம். கொரோனா காலத்தில், இந்த லாக்டவுன் நேரத்தில், எங்கள் வாழ்வாதாரம் மிகவும் கஷ்டமாக இருந்தது. முதல்வர் தளர்வுகள் அறிவித்தப்படி சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, தொழில் புரிவதற்கு நன்மை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இவர்கள் சொன்னது போல, இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

கொரோனாவும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்ற இரண்டையும் கவனத்தில் கொண்டு அரசு கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தியாக வேண்டியிருக்கிறது. அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கடமை மக்களாகிய உங்களுக்கு இருக்கிறது. இந்த தளர்வுகளுக்கான உண்மையான நோக்கத்தை உணர்ந்து, மக்கள் செயல்பட வேண்டும். தளர்வுகள் கொடுத்துவிட்டார்கள் என்று அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடக் கூடாது. தங்களுக்குத் தாங்களே ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடுகளை விதித்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நமக்கு நாமேதான் முதன்மையான பாதுகாப்பு. வர்த்தகர்கள் விதிமுறைகளை பின்பற்றி தங்களது வணிகத்தை செய்ய வேண்டும்.

துணிக்கடை உரிமையாளர்: வணக்கம், டெக்ஸ்டைல் உரிமையாளர் பேசுகிறேன். மற்ற கடைகள் மாதிரி எங்கள் கடைகளுக்கும் கொஞ்சம் தளர்வுகளை கொடுத்தால் எங்களுக்கு நன்றாக இருக்கும். தமிழக அரசு என்ன விதிமுறைகளை சொல்கிறதோ, அந்த விதிமுறைகளை நாங்கள் கண்டிப்பாகக் கடைபிடிப்போம். எங்கள் டெக்ஸ்டைஸ் சார்பாகவும், துணி வியாபாரிகள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர்: தளர்வுகள் தருவது முக்கியமானது அல்ல. அந்த தளர்வுகளுக்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றியாக வேண்டும். தேநீர்க் கடைகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தாக வேண்டும். முடித்திருத்தும் நிலையங்களிலும் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். பல்வேறு விமர்சனங்கள் வரும் என்கிற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும்.

கொரோனா காலக் கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும்    இந்தத் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன். கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாட்டோடு நடந்து கொள்கிற மக்களாக நம் தமிழ்நாட்டு மக்கள் மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அந்த விருப்பத்தை நம் மக்கள் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு நிரம்ப இருக்கிறது. முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்து சேவை விரைவில் இயங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்.

இப்படி ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு மக்கள் துணை அவசியம். தொற்றுப் பரவலைத் தகர்க்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. மக்கள் சக்தியே உயர்ந்தது என்பதை விரைவில் நிரூபிப்போம்.  இவ்வாறு அவர் பேசினார். ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு  மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாட்டோடு நடந்து கொள்கிற மக்களாக  நம் தமிழ்நாட்டு மக்கள் மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.


Tags : Chief Minister ,MK Stalin , People must cooperate to put an end to the whole curfew: Chief Minister MK Stalin's request
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...