சிறந்த தானம்!

இன்று, உலக ரத்த தான நாள். ரத்த தான நாள் என்பதை மனித உயிர்களை காக்கும் நாள்,  சக மனிதரை நேசிக்கும் நாள், ஜாதி-மதங்களை இணைக்கும் நாள் என்றும் கூறலாம். உடலுக்கு தேவையான ஆக்சிஜனை, ரத்தம் தான் நுரையீரலில் இருந்து, நாளங்களின் வழியாக, உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்கிறது. அதேபோல, உடல் பாகங்களில் ஏற்படும் கழிவுகளை சுமந்து, இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுக்கு கொண்டு செல்லும் பணியையும், ரத்தம் தான் செய்கிறது. ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் 6 லிட்டர் ரத்தம் இருக்கிறது.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் நோய்  எதிர்ப்பாற்றலை பெருக்குவதற்குத் துணைபுரிகின்றன. சிவப்பு அணுக்கள், நம்  உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. ‘ஹீமோகுளோபின்’ எனப்படும் சத்துப்  பொருள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவையெல்லாம் உடல் முழுவதும்  சென்று நமக்கு தேவையான ஆற்றலை தருகின்றன. நம் உடலில் இருக்கக்கூடிய இரும்புச் சத்து குறைதல்  அல்லது உடம்பில் ‘அனீமிக்’ என்று சொல்லக்கூடிய ரத்தசோகை ஏற்படுதல், சத்தான  உணவுகளை உண்ணாமல் இருத்தல் போன்றவற்றால் ரத்தத்தின் அளவு  குறைகிறது. விபத்துகளாலும் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுகிறது.

இவ்வாறு  பல்வேறு காரணங்களால் உடலில் ரத்த இழப்பு ஏற்படும்போது, பிறருடைய ரத்தத்தை  எடுத்துக் கொடுப்பது மருத்துவமுறையாக உள்ளது. இதைத்தான் ரத்த தானம்  என்கிறோம். 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். ஒருவரிடம் இருந்து 350 மி.லி., ரத்தம் மட்டுமே தானமாக எடுக்கப்படுகிறது. நாம் ரத்த தானம் செய்யும்போது, நம் உடலுக்கும்  அது நன்மை செய்கிறது. பொதுவாக ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகம்  இருக்கும். அது நம் உடலில் கல்லீரல், இதயம் ஆகிய இடங்களில் படிந்து  உடலுக்குச் சோர்வையும், துன்பத்தையும் தரும். ரத்த தானம் செய்யும்போது, இந்த அதிகப்படியான இரும்புச் சத்தும் ரத்தத்தோடு சேர்ந்து செல்வதால் இரும்புச் சத்து சமன்செய்யப்படுகிறது.

ரத்தத்தை நன்கொடையாக வழங்குபவருக்கு,  மாரடைப்பு வருவது குறையும். புதிதாக ரத்த அணுக்கள் உற்பத்தியாகும். ரத்த  அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகள் குறையும். ஒரு  யூனிட் ரத்தம் கொடுத்தால், நம் உடலில் உள்ள 650 அளவு கலோரியை  எரித்துவிடுகிறது. இது ரத்த தானம் செய்வதால் நம் உடலுக்குக்  கிடைக்கும் பயனாகும். நாட்டில், ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அந்த வகையில், ஆண்டுக்கு, 400 லட்சம் யூனிட் ரத்தம் தேவை. ஆனால், 40 லட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே கொடையாக கிடைக்கிறது. தற்போது ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் தயாரிக்கப்படுவதுபோல் ரத்தத்தை தயாரிக்க முடிவதில்லை. அதனால் தான், அது உயிர் காக்கும் திரவமாக போற்றப்படுகிறது. எனவே அனைவரும் ரத்த தானம் செய்வோம். மனித உயிர்களை காப்போம்.

Related Stories: