திருமணம் செய்து கொள்வதாக கூறி போலீஸ் பெண் எஸ்ஐ பலாத்காரம்: வங்கி அதிகாரி மீது வழக்கு

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் வங்கி அதிகாரி ஒருவா் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் போலீஸ் எஸ்ஐ புகாா் அளித்துள்ளாா். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாதைச் சோ்ந்த வங்கி அதிகாரி ஒருவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் பெண் எஸ்ஐ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பெண் ஐஎஸ் அளித்த புகாரில், ‘குறிப்பிட்ட வங்கியின் அதிகாரிக்கும் எனக்கும் சமூக ஊடகம் மூலம் அறிமுகம் கிடைத்தது. முதலில் என்னுடன் அவர் நட்பாக பேசினார். பின்னா், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினாா்.

இதையடுத்து நேரில் பலமுறை சந்தித்தோம். அப்போது நாங்கள் நெருக்கமாக இருந்த வீடியோ, படங்களை வைத்து என்னை மிரட்டுவும், துன்புறுத்தவும் தொடங்கினாா். என்னை பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினாா். மேலும், அந்த வங்கி அதிகாரியுடன் பணியாற்றிய மேலும் இருவரும் என்னை மிரட்டினா். எனவே, திருமணம் செய்துகொள்வதாக கூறி, என்னை பாலியல் பலாத்காரம் செய்த வங்கி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வங்கி அதிகாரி மீது பாலியல் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக வங்கி அதிகாரி இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் என மூன்று பேரும் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பெண் எஸ்ஐ ஒருவரே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சம்பவம், மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>