நெல்லையில் கார் பருவ சாகுபடி பணிகள் துவக்கம்: விவசாயிகள் தீவிரம்

நெல்லை: கொரோனா ஊரடங்கு காலத்தில் கார் பருவ சாகுபடி பணிகள் துவங்கியுள்ள நிலையில் நெல்லை ராமையன்பட்டி பகுதியில் விவசாயிகள் முகக்கவசம் அணிந்தபடி டிராக்டரை கொண்டு நிலத்தில் உழவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கத்துக்கு மாறாக பரவலாக கனமழை பெய்துள்ளது. இதனால் இம்மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

இதுவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கார் பருவ சாகுபடி செய்யப்படாத பகுதிகளில், இந்தாண்டு பெய்த மழையால் கோடை காலத்திலும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு, அணைகளில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கார் பருவ சாகுபடி பணிகள் மும்முரமாக துவங்கி உள்ளன. இதையொட்டி நெல்லை ராமையன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் முகக்கவசம் அணிந்தபடி டிராக்டரை கொண்டு நிலத்தில் உழவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் நெல்லை ராமையன்பட்டி அருகே கண்டியப்பேரி பகுதியில் உள்ள நிலத்தை உழுவதற்காக விவசாயி ஒருவர் முகக்கவசம் அணிந்து கொண்டு, சிறிய வகை டிராக்டரை எடுத்துச் சென்றார்.  

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும் வரை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் இந்த ஆண்டு கார் பருவ சாகுபடியிலும் நல்ல மகசூல் பெற முடியும். அதே நேரத்தில் விவசாய இடுபொருள்களான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதோடு, விவசாய விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் என்னை போன்ற சாகுபடியாளர்களுக்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.

Related Stories: