×

சசிகலா ஆடும் விநோத நாடகம்: அதிமுக கடும் கண்டனம்

சென்னை: அதிமுகவை அபகரிக்க சசிகலா சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சு களைகளாகவும் தங்களை வளப்படுத்தி கொண்ட சிலர் அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக்கொண்டு இருப்பதாக சசிகலாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்த சசிகலா இப்போது அரசியலில் முக்கியத்துவத்தை தேடி கொள்ள கட்சியை அபகரிக்கும் முயற்சியில் இறங்க போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும் அதை ஊரறிய ஒளிபரப்புவதும் என்று வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருவதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக அதிமுக ஒருபோதும் தன்னை அழித்துக்கொள்ளாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சியின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் இழுக்கு தேடியவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி சசிகலாவுடன் பேசிய 15 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.Tags : Sasikela , admk
× RELATED சசிகலா விவகாரம் குறித்து மோடி,...