ஊரடங்கை மீறியதாக புகார்; போலீஸ் காவலில் ‘மாற்றுத்திறனாளி’ அடித்துக் கொலை?.. 2 ஏட்டு உட்பட 8 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் விராஜ்பேட்டை போலீசார் கடந்த 8ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறியதாக அதேபகுதியைச் சேர்ந்த ராய் டிசோசா (50) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இவர், சற்று மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி என்று கூறப்படுகிறது. இருந்தும் காவல் நிலையில் பணியில் இருந்த போலீசார், டிசோசாவை அடித்து உதைத்தனர். பின்னர் அவரது தாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர், தனது மகனை மடிகேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ரத்த காயங்களுடன் அழைத்து சென்றார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் டிசோசா  இறந்துவிட்டார்.

அதிர்ச்சியடைந்த டிசோசாவின் தாய், போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, அடித்து கொன்றதாக குற்றம்சாட்டினார். இச்சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதையடுத்து, இறந்த டிசோசாவின் உடல் மடிகேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி,  கடந்த 12ம் தேதி இவ்வழக்கின் விசாரணையை சிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, விராஜ்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 2 ஏட்டுகள், 6 காவலர்கள் என எட்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தெற்கு ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரவீன் மதுகர் பவார் கூறுகையில், ‘இறந்த டிசோசாவின் தாயார், போலீஸ்காரர் அடித்து உதைத்து தூக்கி வெளியே எறிந்ததாக புகார் அளித்துள்ளார். அதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் போலீஸ்காரர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விபரங்கள் சிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்றார்.

Related Stories:

>