மரித்து போன மனிதநேயம்: அனாதை எனக்கூறி பெற்ற குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைத்த தந்தை கைது

சிவகங்கை: குழந்தையை அனாதை எனக்கூறி மருத்துவமனையில் ஒப்படைத்த தந்தை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூருக்கு காரில் செல்லும்போது வழியில் திருப்பாச்சேத்தியில் சாலையோரத்தில் ஆறு மாத பெண் குழந்தை அனாதையாகக் கிடந்தது எனக்கூறி இரு இளைஞர்கள் கடந்த 11ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை ஒப்படைத்தனர். அவர்கள் தங்களது சொந்த ஊர் மதுரை மாவட்டம் திருமங்கலம் என மருத்துவமனையில் தகவல் தெரிவித்தனர்.

குழந்தை குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயா, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் சைமன்ஜார்ஜ், மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் சரளா, மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் ரசீந்திரக் குமார், ஜீவானந்தம், குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் விசாரணை செய்தனர். விசாரணையில் குழந்தையின் தந்தையான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எருமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (எ) ஆனந்தகுமார் என்பவர், குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் அனாதை எனக்கூறி நாடகமாடி மருத்துவமனையில் ஒப்படைத்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் சைமன்ஜார்ஜ், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விஜயா விசாரணை நடத்தி குழந்தையின் தந்தை ஆனந்தகுமார், தாத்தா பெரியசாமி உறவினர்கள் தர்மபாண்டி, செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். குழந்தையின் தந்தை ஆனந்தகுமார், உறவினர் தர்மபாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள பெரியசாமி, செல்வம் இருவரையும் தேடுகின்றனர். மீட்கப்பட்ட பெண் குழந்தை பராமரிப்பிற்காக மதுரையில் உள்ள தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: