×

2 பேர் மறைவு; 2 பேர் ராஜினாமா செய்த நிலையில் 2 ஆண்டுக்கு பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்?.. ஜோதிராதித்யா, கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி

புதுடெல்லி: பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று 2 ஆண்டு முடிந்த நிலையில், 4 அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் குறித்து டெல்லியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில், ஜோதிராதித்யா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பிரச்னை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தலைநகர் டெல்லியில் அரசியல் சூழலும் மாறிவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இரண்டாவதாக ஆட்சியை பிடித்த பின்னர் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 57 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

ஆனால், தற்போது 53 பேர் அமைச்சர்களாக உள்ளனர். மத்திய பிரதேசத்தில், கடந்த ஆண்டு கமல்நாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாநிலங்களவை எம்பி ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு, மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகா ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ரயில்வே அமைச்சர் அல்லது நகர்ப்புற வளர்ச்சி அல்லது மனிதவள மேம்பாட்டுத்துறை போன்ற முக்கிய இலாக்களில் ஒன்று கிடைக்க வாய்ப்புள்ளது. இவர், பாஜகவில் சேர்ந்து 15 மாதங்கள் ஆன நிலையில், பாஜக தலைமை அவருக்கு அளித்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால், அவர் பாஜகவுக்கு அளித்த வாக்குறுதியின்படி மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

பாஜகவின் புதிய திட்டத்தின்படி, அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள், ஆண்டின் பிற்பகுதியில் மேலும் 2 மாநில தேர்தல்கள் வரவுள்ளதால் தேர்தலுக்கான வியூகங்களின் அடிப்படையில் அமைச்சரவை விரிவாக்கம் நடக்கும் என்றும் கூறுகின்றனர். அதேநேரம், அமைச்சரவையில் இளைஞர்களை அனுமதிக்க கட்சித் தலைமை ஆர்வம் காட்டுகிறது. அதனால், ஜோதிராதித்யா சிந்தியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால், ஒடிசாவின் பைஜயந்த் பாண்டா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி, அப்னா தளம் தலைவர் அனுபிரியா பட்டேல் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

பிரதமர் மோடி தனது முதல் பதவி காலத்தில், பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அமைச்சரவையை விரிவுபடுத்தி, அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 லிருந்து 66 ஆக உயர்த்தினார். ஜூலை 2016ம் ஆண்டில் 2 ஆண்டுகள் நிறைவடைந்த சில மாதங்களிலேயே, அமைச்சர்களின் எண்ணிக்கையை 78 ஆக உயர்த்தி மாற்றியமைத்தார். பின்னர் ஒரு வருடம் கழித்து, அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்தார். இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த பின்னர், கடந்த மே 30, 2019 அன்று 57 அமைச்சர்களுடன் பிரதமராக மோடி பதவியேற்றார். ஆனால் தற்போது வரை அமைச்சரவையில் மாற்றம் ஏதும் செய்யப்படாத நிலையில், 57 பேரில் 53 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர்.

குறிப்பாக, மத்திய அமைச்சர்களாக பதவியில் இருந்த காலத்தில் ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் சுரேஷ் அங்காடி ஆகியோர் காலமானார்கள். மேலும்,  அமைச்சர்களாக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோன்மணி அகாலி தளம் ஆதரவு வாபஸ்) மற்றும் அரவிந்த் சாவந்த் (சிவசேனா ஆதரவு வாபஸ்) ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். எனவே, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று இரண்டாண்டு முடிவடைந்த நிலையில், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே, உத்தரபிரதேச மாநில அமைச்சரவையிலும் பெரிய மாற்றம் இருக்கும் என்பதால், அம்மாநில விவகாரம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களில் தலைநகர்  டெல்லியில் முக்கிய அரசியல் நகர்வுகள் இருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4 அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு
மத்திய அமைச்சராக இருந்த லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் இறந்த பின்னர் (2020 அக்டோபர்), அவரது இலாகாவான நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சக பொறுப்பு, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய 3 அமைச்சகங்களை கவனித்து வருகிறார். சிரோன்மணி அகாலி தளத் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகியதைத் தொடர்ந்து (2020 செப்டம்பர்) உணவு பதப்படுத்தும் இலாகாவை நரேந்திர சிங் தோமர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

சிவசேனாவின் அரவிந்த் சாவந்த், தனது பதவியை ராஜினாமா செய்ததால்,மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சுற்றுச்சூழலைத் தவிர 2019 நவம்பர் முதல் கனரக தொழில்துறை அமைச்சக இலாகாவை கூடுதலாக கவனித்து வருகிறார். மத்திய ஆயுஷ் துறை அமைச்சராக இருந்த பாத் நாயக் விபத்தில் சிக்கியதால், அவரது இலாகாவை கூடுதலாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Jyotraditya , 2 people died; Change in the Union Cabinet after 2 years with the resignation of 2 people? .. Jyotiraditya, Ministerial post for the coalition parties
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...