×

கால், முதுகு எலும்பு முறிவால் அவதியுறும் தாயை முதுகில் சுமந்து செல்லும் ‘பாச’ மகள்: மருத்துவமனைக்கு நடந்தே செல்லும் பரிதாபம்

கோபால்கஞ்ச்: பீகாரில் கால் மற்றும் முதுகு எலும்பு முறிவால் அவதியுறும் தாயை, தனது கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு முதுகில் சுமந்து செல்லும் பாச மகளை பலரும் பாராட்டி வருகின்றனர். பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த உம்ராவதி என்ற பெண்ணின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அதனால், தனது தாயுடன் உம்ராவதி வசித்து வந்தார். அவரது தாய், கடந்த மூன்று வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். காரணம், மூன்று ஆண்டுகளுக்கு முன் தாயின் காலில் முறிவு ஏற்பட்டதால், அவரால் மற்றவர்களை போன்று நடக்க முடியாது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், தாயின் முதுகு எலும்பு முறிந்ததால், அவரால் நிமிர்ந்து நடக்கவோ, அமரவோ முடியவில்லை.

பாரலியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக, தனது தாயை அழைத்து செல்ல திட்டமிட்டார். ஆனால், அவரிடம் பணம் இல்லை. அதேநேரம் வீட்டில் இருந்து பாரலி நகருக்கு 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். வீட்டில் இருந்து ஆட்டோவில் அழைத்து செல்லலாம் என்றால், எந்த ஆட்டோவும் கிடைக்கவில்லை. அதனால், கிராமத்திலிருந்து தனது தாயை அரை கிலோ மீட்டர் தூரம் முதுகில் சுமந்து கொண்டு, பாரலி சாலைக்கு வந்தார். அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி பாரலி பஸ் ஸ்டாண்டுக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்வதற்காக மீண்டும் தனது தாயை முதுகில் சுமந்து சென்றார்.

அங்கு, தாயின் உடலை எக்ஸ்ரே செய்துவிட்டு மருத்துவரை சந்தித்தபின், மீண்டும் பஸ் ஸ்டாண்ட் வந்தார். அங்கிருந்து, பஸ்சில் தனது தாயை முதுகில் சுமந்துவாறே சென்று அமர்ந்தார். அவரது கிராம சாலை வழியாக சென்ற அந்த பஸ், குறிப்பிட்ட இடத்தில் நின்றது. பின்னர் அங்கிருந்து தனது தாயை அரை கிலோமீட்டர் தூரம் முதுகில் தூக்கிக் கொண்டு தனது வீட்டை அடைந்தார். இதேபோல், ஒவ்வொரு முறையும் பராலி மருத்துவமனைக்கு செல்லும் போதும், தனது தாயை முதுகில் சுமந்து கொண்டு சென்று வீடு திரும்புகிறார் உம்ராதேவி. தனது தாய்க்கு இவர் ஆற்றும் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, உம்ராதேவி கூறுகையில், ‘கடந்த மூன்று ஆண்டுகளாக, என் தாயை முதுகுகில் சுமந்து சென்றுதான் பராலிக்கு சிகிச்சைக்காக அழைத்து வருகிறேன். தற்போது அவருக்கு முதுகு தண்டு எலும்பு முறிந்ததால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. எனது தாய்க்கு, ஓய்வூதிய திட்ட பலன் கிடைக்கிறது. ரேஷன் கார்டும் உள்ளது. ஆனால், வசிப்பதற்கு வீடு இல்லை. அதனால்,  குடிசைப்பகுதியில் வசிக்கிறோம்’ என்றார்.


Tags : ‘Affectionate’ daughter carrying mother suffering from leg and spinal fractures on her back: Pity walking to hospital
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்