தமிழ்நாட்டில் மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழக அரசு நிர்வாக ரீதியாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் அனுபவமிக்க அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு, கூடுதல் பதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.  

திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மனித உரிமை ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த பி.சங்கர் காதி கைவினைப் பொருள் ஆணைய சி.இ.ஓ.வாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மேக்ராஜ் நகராட்சி நிர்வாகத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

தமிழ்நாடு கோ - ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனராக டி.பி.ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோல் பேரூராட்சி இயக்குனர் எஸ்.பழனிசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். 

செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். திருவாரூர் ஆட்சியராக இருந்த சாந்தா, நில நிர்வாக கூடுதல் ஆணையராராகவும், கரூர் ஆட்சியராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே, நிதித்துறை கூடுதல் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 

மீன்வளத்துறை ஆணையராக கருணாகரனும்,  நில சீர்த்திருத்தத்துறை இயக்குனராக ஜெயந்தியும், வணிக வரித்துறை இணை ஆணையராக கற்பகமும், போக்குவரத்து துறை ஆணையராக சந்தோஷ் கே.மிஸ்ராவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 

தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளி, விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக ஆபிரகாம் நியமனம் என மொத்தம் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்களை வெளியிடப்பட்டிருக்கிறது.

Related Stories:

>