×

2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 4 பேரை திருமணம் செய்து ரூ18 லட்சம் பறித்த இளம்பெண்

திருமலை: 2 குழந்தைகள் பெற்றதை மறைத்து 4 பேரை திருமணம் செய்து ரூ18 லட்சம் பறித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நரபுராஜூ கண்ரிகாவை சேர்ந்தவர் சுனில்குமார்(29). இவர் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி சத்தியநாராயணபுரத்தில் வசித்து வந்தார். ஏடிபி நிதி நிறுவனத்தில் பணிபுரிபவர் சுஹாசினி. இவருடன் சுனில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அப்போது சுஹாசினி தான் அனாதை என்று கூறி கடந்தாண்டு டிசம்பரில் சுனில்குமாரை திருமணம் செய்து கொண்டார். சுனில்குமாரின் குடும்பத்தினர் சுஹாசினிக்கு 3 சவரத்தில் தங்க நகைகளை வாங்கி கொடுத்தனர்.

திருமணமாகி குடும்பம் நடத்த தொடங்கிய சுஹாசினி சில மாதங்களில், சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கூறி தனது கணவர் சுனில்குமாரிடம் இருந்து ₹6 லட்சம் பெற்றுள்ளார். இதுபற்றி கடந்த 7ம்தேதி அறிந்த சுனில்குமாரின் பெற்றோர், சுஹாசினியிடம் பணத்தை என்ன செய்தாய் என்று கேட்டனர். அதற்கு சரிவர பதிலளிக்காத சுஹாசினி திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் வீட்டில் வைத்திருந்த ஆதார் அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் சுனில்குமார் சுஹாசினியை தேடினார்.

அப்போது சுஹாசினிக்கு ஏற்கனவே நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நடந்து 2 மகள்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் சுனில்குமார் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே சுனில்குமாருக்கு போன் செய்த சுஹாசினி, நான் ஐதராபாத்தில் இருக்கிறேன். விரைவில் உன்னிடம் வாங்கிய பணத்தை தருகிறேன். போலீசில் புகார் கொடுத்தால் உனக்குதான் பிரச்னை வரும் என்று மிரட்டியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், நான் வெங்கடேஷை தவிர ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரையும் திருமணம் செய்துள்ளேன் எனக்கூறி அந்த புகைப்படங்களை செல்போனில் அனுப்பினார். இதுகுறித்து சுனில்குமார் திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும் ஒருவரும் போலீசில் கொடுத்துள்ள புகாரில் சுஹாசினி தன்னையும் திருமணம் செய்து ரூ.12 லட்சத்தை ஏமாற்றிவிட்டு சென்றார் என தெரிவித்துள்ளார். இப்புகார்களின் ேபரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுஹாசினி வெவ்வேறு பெயரில் திருமணம் செய்துள்ளாரா? வேறு யாராவது சுஹாசினியின் வலையில் சிக்கி உள்ளார்களா? என்பது குறித்தும், அவர் தற்போது எங்குள்ளார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவரை கைது செய்யவும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : The girl who hid the existence of 2 children, married 4 people and stole Rs 18 lakh
× RELATED நண்பனின் கொலைக்கு பழிவாங்க சிறுவன்...