×

ஓடும் காரில் மனைவியை கொன்ற போலீஸ் போட்டோகிராபர் கைது

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே ஓடும் காரில் மனைவியை கொலை செய்த போலீஸ் போட்டோகிராபர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன்(30). போலீஸ் போட்டோகிராபரான இவர், 3 ஆண்டுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த தரணிதேவி (25) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில், தரணிதேவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம், ஆத்தூர் சென்ற சபரிநாதன் மனைவியை சமாதானப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, தரணிதேவி தனது குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு, கணவருடன் காரில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில், இரவு 7.30 மணியளவில் பவானி அரசு மருத்துவமனைக்கு சென்ற சபரிநாதன், தரணிதேவியை மயக்கமடைந்ததாக கூறி சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, தரணிதேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சபரிநாதன் குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், துருவி துருவி சபரிநாதனிடம் விசாரித்தனர். இதில், சபரிநாதனே தனது மனைவி தரணிதேவியை கொலை செய்தது அம்பலமானது.

காரில் வந்து கொண்டிருக்கும்போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சபரிநாதன் குமாரபாளையம் அருவங்காடு அருகே காரை நிறுத்தி விட்டு, தரணிதேவியை கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில், அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சபரிநாதனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போலீசார், நேற்றிரவு அவரை கைது செய்து குமாரபாளையம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Police have arrested a photographer who killed his wife in a speeding car
× RELATED குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட ஆத்திரம்;...