முத்தரசன் தலைமையில் சேலத்தில் சோசலிசம் - மம்தாபானர்ஜி திருமணம்

சேலம்,: சேலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மகன் சோசலிசத்துக்கும்-மம்தாபானர்ஜிக்கும் நேற்று திருமணம் நடந்தது. சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளரான இவர், தனது 3 மகன்களுக்கு கம்யூனிசம், லெனினிசம், சோசலிசம் எனவும், தனது பேரனுக்கு மார்க்சிசம் எனவும் சித்தாந்த பெயர்களை சூட்டியுள்ளார். பல்வேறு போராட்டங்கள் மற்றும் பொதுமக்கள் பிரச்னைகளுக்கு போராடி வந்த மோகன், தனது குழந்தைகளுக்கு வித்தியாசமாகவும், பொதுமக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கருதி பெயர்களை இப்படி வைத்தார்.

மோகனின் 2 மகன்களுக்கும் திருமணம் ஆன நிலையில், மூன்றாவது மகனான சோசலிசத்திற்கும், உறவினர் பழனிசாமியின் மகளான மம்தாபானர்ஜிக்கும் திருமணம் செய்ய முடிவாகி இருந்தது. இந்த திருமணத்திற்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில், சோசலிசம்-மம்தாபானர்ஜி திருமணம், சேலம் அருகேயுள்ள காட்டூர் கிராமத்தில் உள்ள மோகன் இல்லத்தில், குறைந்த உறவினர்களோடு எளிமையாக நேற்று காலை நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். இந்த திருமணத்தில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள், பிரபலங்கள் மற்றும் ஏராளமானோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகன்களுக்கு வித்தியாசமான பெயர்களை வைத்ததால், தற்போது மோகன் பலருக்கு தெரியும் வகையில் பிரபலமாகியுள்ளார்.

Related Stories: