பிரெஞ்ச் ஓபன் பைனல்; பரபரப்பான போட்டியில் ஜோகோவிச் வெற்றி: 5 செட்களில் சிட்சிபாசை வீழ்த்தினார்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு பைனலில், முதல் 2 செட்களை இழந்த பின்னர், நம்பிக்கை இழக்காமல் அடுத்த 3 செட்களை அடுத்தடுத்து கைப்பற்றி சிட்சிபாசை வீழ்த்தி, ஜோகோவிச் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இது அவரது 19வது பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று பாரிசில் நடந்தது. இதில் ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும், 4ம் இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாசும் மோதினர். இதுவரை இருவரும் 7 போட்டிகளில் மோதியுள்ளனர். இதில் 5 முறை ஜோகோவிச்சும், 2 முறை சிட்சிபாசும் வென்றுள்ளனர்.

கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் இருவரும் அரையிறுதியில் மோதினர். அதில் ஜோகோவிச் கடும் போராட்டத்திற்கு பின்னர், 5 செட்களில் சிட்சிபாசை வீழ்த்தினார். இப்போட்டியில் முதல் செட்டை 7-6 என டைபிரேக்கரில் கைப்பற்றிய சிட்சிபாஸ், 2ம் செட்டையும் 6-2 என வென்று, அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனாலும் அடுத்த 3 செட்களை 6-3, 6-2, 6-4 என எளிதாக வென்று, பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஜோகோவிச் 2ம் முறையாக கைப்பற்றி சாதனை படைத்தார்.  இந்த வெற்றியின் மூலம் 4 கிராண்ட்ஸ்லாம்களிலும் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை 2 முறை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ராய் எமர்சன் மற்றும் ராட் லேவருடன் தற்போது ஜோகோவிச் இணைந்துள்ளார்.

ஜோகோவிச் ஏற்கனவே 2016ல் பிரெஞ்ச் ஓபனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் 9 முறையும், விம்பிள்டனில் 5 முறையும், யு.எஸ்.ஓபனில் 3 முறையும் என மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

ரோஜர் பெடரரும், ரஃபேல் நடாலும் 20 முறை ஆடவர் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். அந்த சாதனையை சமன் செய்வதற்கு, ஜோகோவிச்சுக்கு இன்னும் ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம்தான் தேவை. பட்டம் வென்ற பின்னர் ஜோகோவிச் கூறுகையில், ‘‘போட்டி நடந்த 4 மணி 11 நிமிடங்களும் மிகவும் பரபரப்பான சூழ்நிலை இருந்தது. இது ஒரு கனவு. சிறந்த வீரரை அதிலும் மிகவும் துடிப்புடன் உள்ள இளம் வீரரை எதிர்த்து ெவல்வது மிகவும் கடினம்.

செமி பைனல் முதல் பைனல் வரை கடைசி 3 நாட்கள் எனது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் கடினமான நாட்களாக இருந்தன. அதனால் நானும் பதற்றமாகத்தான் இருந்தேன். இப்போட்டியில் முதல் 2 செட்களை இழந்தேன். பின்னர், 3வது செட் துவங்கியதும், நான் எங்கிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். நான்தான் வெல்லப்போகிறேன் என்பது அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது. அதன் பின்னர் நான் நினைத்த திசையில்தான் போட்டியின் நகர்வு இருந்தது’’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>