மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் நானா படோல் முதல்வர் ஆகணுமாம்: காங். தலைவர் கருத்தால் சலசலப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், தற்போது இக்கூட்டணிக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த குழப்பங்கள் தற்போது விரிசலை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரான நானா படோல், ‘இனிவரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்’ என்றார். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான நவாப் மாலிக் கூறுகையில், ‘நானா படோல் முதல்வராக விரும்புகிறார்.

அதில் தவறில்லை ஆனால் அதற்கு முன் அவர்களின் கட்சியையும், தொண்டர் பலத்தையும் பலப்படுத்த வேண்டும். மகா விகாஸ் கூட்டணி கடந்த பேரவை தேர்தலுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்டது. எதிர்வரும் தேர்தல்களின் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது’என்றார். இதே போல சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘நானா படோல் எங்கள் கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளவர். அவர்கள் அப்படியொரு முடிவு எடுப்பதாக இருந்தால் எங்களால் வாழ்த்துக்களை மட்டும் தான் கூற முடியும்’ என்றார்.

Related Stories: