×

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று விவசாய சங்க தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தமிழக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் 2019ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.

இதனால் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள கருக்காகுறிச்சி வட தெருவில் 463 சதுர கிலோ மீட்டருக்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை கடந்த 10ம் தேதி வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட தெரு அருகே உள்ள கோட்டைக்காடு பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் 20 ஆண்டுகளுக்கு முன் சோதனைக்காக போடப்பட்டுள்ள எண்ணெய் கிணறு பிளான்ட் மீது ஏறி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கடந்த 10ம் தேதி ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களை செயல்படுத்த ஏலம் விடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புதுகை மாவட்டம் வட தெருவும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏலத்திலிருந்து வட தெருவை நீக்க வேண்டும். வருங்காலங்களில் தமிழ்நாட்டின் எந்த பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு தமிழக விவசாய சங்க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளார் பிஆர்.பாண்டியன் கூறுகையில், நெடுவாசல் அருகே வட தெரு கிராமத்தை மையமாக வைத்து ராமநாதபுரம் கடற்பகுதி வரை ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான தொகுப்பு ஒப்பந்தத்தை ஒற்றைசாளர முறையில் கோரப்பட்டுள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எரிவாயு, நிலக்கரி, கச்சா, நிலவாயு உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நிறுவனம் எடுத்து கொள்வதற்கு முழு அதிகாரம் வழங்கும் அடிப்படையில் ஒப்பந்தம் வழி வகிக்கிறது. போராட்ட களத்திற்கு மத்திய அரசே விவசாயிகளை தள்ளுகிறது என்றார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், கூட்டாட்சி தத்துவத்தை மீறி மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசு சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது. வட தெருவில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் விவசாயிகள் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர்(இந்திய கம்யூ.) தனபதி கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை ஒழிக்க மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ திட்டத்தை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. வட தெருவில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவர் என்றார்.

Tags : Massive protests will erupt if hydrocarbon extraction is not abandoned: Farmers warn federal government
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...