ஹெல்மெட், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

பெரம்பூர்: சென்னையில் கொரோனா  பரவலின் வீரியம் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி சில வாகன ஓட்டிகள் மீண்டும் அதிகளவில் சாலைகளில் சுற்றிவருகின்றனர். தற்போது பலரும் ஹெல்மெட் அணிவதை மறந்து முகக்கவசம் மட்டுமே அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர்.  இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், புளியந்தோப்பு போக்குவரத்து உதவி கமிஷனர் ராஜா உத்தரவின் பேரில், வியாசர்பாடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் அம்பேத்கர் கல்லூரி சிக்னல் அருகே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று  நடந்தது.

அப்போது, ஹெல்மெட், முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள், தரமற்ற முகக்கவசம் பயன்படுத்தியவர்களை பிடித்து வரிசையில் நிற்கவைத்து ஹெல்மெட், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தரமற்ற முகக்கவசம் அணிவதால் வைரஸ் தொற்று ஏற்படுவது குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விளக்கினர். முதல்முறை என்பதால் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தினர். அடுத்தமுறை அதே நபர் சிக்கினால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>