கல்குவாரி நீரை சுத்திகரித்து வினியோகம்: பொது மக்கள் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் அருகே கீரப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள விவசாயக் கிணறுகளில் உள்ள நீரை ராட்சத மோட்டார் மூலம் உறிஞ்சி டேங்கர் லாரிகள் மூலம் தனியார் ஓட்டல் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து, குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதுதவிர, கீரப்பாக்கம் ஊராட்சியை சுற்றியுள்ள 12 கல்குவாரிகள் 100 முதல் 300 அடி ஆழம் கொண்டவை. இங்கு தண்ணீர் நிறைந்து கடல் போன்று காட்சியளிக்கிறது.

இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா என கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் இங்குள்ள தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். பின்னர் இந்த நீரை மக்கள் குடிக்கலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகின. இந்த கல்குவாரி நீரை சுத்திகரித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கடந்த அதிமுக அரசில் பல்வேறு தரப்பு அதிகாரிகள், அமைச்சர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு, கல்குவாரி நீரை சுத்திகரித்து மக்கள் பயன்பாட்டுக்கு வினியோகம் செய்வதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: