ரூ24 லட்சம் பணமோசடி செய்தவர் கைது

பல்லாவரம்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (71). இவரது மனைவி மீனாட்சி (70). கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து பல்லாவரம் அருகே பம்மல், வஉசி நகர், ஆறுமுகம் தெருவில் ஒரு வாடகை வீட்டில் மனைவியுடன் தங்கி சுப்பிரமணியன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, தங்களுக்கு உதவியாக இருக்க, சென்னை முகப்பேர் பகுதியில் ஒரு தனியார் காப்பகத்தில் பணிபுரிந்த கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த குழந்தைசாமி (40) என்பவரை வீட்டு வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களிலேயே குழந்தை சாமி நல்லவனாக நடித்து, சுப்பிரமணியனின் மனதில் இடம்பிடித்தார்.

இதையடுத்து, தனது வங்கிக் கணக்கின் வரவு-செலவு கணக்குகளை குழந்தைசாமியை பார்க்கும்படி கூறியுள்ளார். இந்நிலையில், சுப்பிரமணியனின் வங்கி கணக்கில் இருந்து சுமார் ₹24 லட்சம் திடீரென வேறொரு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது. இதில் சந்தேகமான சுப்பிரமணியன், இதுகுறித்து குழந்தைசாமியிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் அங்கிருந்தால் மாட்டிக் கொள்வோம் என குழந்தைசாமி தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து சங்கர் நகர் போலீசில் கடந்த வாரம் சுப்பிரமணியன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவரது செல்போன் எண்ணை வைத்து, குழந்தைசாமி கள்ளக்குறிச்சியில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அங்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று, நேற்று முன்தினம் இரவு குழந்தைசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் நேற்று காலை சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர் சுப்பிரமணியனின் வங்கி கணக்கில் இருந்து ரூ24 லட்சம் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், அப்பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருப்பதாக குழந்தைசாமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>