×

சொகுசு காரில் ஜாலியாக வந்து ஆடு, கோழிகள் திருடிய தம்பதி பிடிபட்டனர்: மூன்றாவது கண் மூலம் சிக்கினர்

ஆவடி: சொகுசு காரில் ஜாலியாக வந்து ஆடு, கோழிகள் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை பாடி, ஜெகதாம்பிகை நகர், வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் பூபாலன்(37). இவர் அந்த பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 29ம் தேதி இரவு கடைக்கு வெளியே கூண்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 15 கோழிகளுக்கு தீவனம் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது கூண்டின் பூட்டு உடைக்கப்பட்டு 15 நாட்டுக் கோழிகள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இதுபோல் கொரட்டூர், போத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இந்திரா(56) என்பவர் வீட்டில் கடந்த மாதம் 2ம் தேதி இரவு இரண்டு ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, கொரட்டூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ஒரு சொகுசு காரில் ஆணும் பெண்ணும் கைக்குழந்தையுடன் வந்து ஆடு, கோழிகளை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.  அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை கொரட்டூர் 200 அடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, திருட்டில் ஈடுபட்ட கார் வந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த காரை போலீசார் மடக்கி சோதனை நடத்தியதில், ஒரு ஆணும் பெண்ணும் கைக்குழந்தையுடன் இருந்தனர்.  அவர்களை காருடன் கொரட்டூர் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரித்ததில், ‘இவர்கள்தான் கோழி, ஆடுகளை திருடியவர்கள் என்பதும் சென்னை ஈக்காட்டுதாங்கல், சுந்தர் நகர், 6வது தெருவில் சேர்ந்த அஷ்ரப் (38), அவரது மனைவி லெட்சுமி(36) என்று தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆடு, கோழிகளை பறிமுதல் செய்தனர். இதுபோல் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Couple caught having fun in luxury car stealing goats and chickens: Caught by third eye
× RELATED மூன்றாவது கண்ணில் சிக்கினால்...