×

மிரட்டும் கருப்பு பூஞ்சை: கடந்த 3 வாரங்களில் மட்டும் 2,100 பேர் பலி

டெல்லி: கருப்பு பூஞ்சை நோய்க்கு கடந்த 3 வாரங்களில் மட்டும் 2,100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பததாக தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் நீடித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரண்டாம் அலை கொரோனா பரவல் கொடூரமாக பரவி பாதிப்பையும், உயிரிழப்பையும் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. இது ஒருபுறம் என்றால் கொரோனா பாதித்தவர்களிடையே கண்டறியப்பட்ட கருப்பு பூஞ்சை நோய் நாட்டின் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் புதிய சவாலை ஏற்படுத்தியது.

கருப்பு பூஞ்சை நோயானது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களிடையே கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் இந்நோயினால் பாதிக்கப்படுவோர் தொடர்ந்து உயிரிழப்பை சந்தித்து வருவதால் மருத்துவத் துறையினர் புதிய சவாலை எதிர்கொண்டுள்ளனர்.

இதுவரையில் நாடு முழுவதும் 31,216 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 3 வாரங்களில் மட்டும் சிகிச்சை பலனின்றி 2109 பேர் உயிரிழந்திருப்பது இந்நோய் மீதான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 3 வாரத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 150% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்கு உதவும் Amphotericin-B என்ற மருந்துக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிர மாநிலத்தில் 7,057 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 609 உயிரிழப்புகளும் அங்கு ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத்தில் 5418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 323 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சையின் போது பயன்படுத்தும் வீரியமிக்க மருந்துகள் காரணமாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு பரவி வருவதாக கூறப்படுகிறது.



Tags : black fungus
× RELATED நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப்...