காட்டுபன்றிக்காக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவசாயி!: போலீசுக்கு அஞ்சி சடலத்தை புதரில் மறைத்து வைத்த நில உரிமையாளர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காட்டுபன்றிக்காக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை புதரில் மறைத்து வைத்த நிலத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மகன் இறந்த செய்தியை அறிந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் தந்தையும் இறந்தது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவர் நேற்று அதிகாலை தனது நிலத்திற்கு செல்லும் போது அதேபகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மரவள்ளி தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் வராமல் இருக்க வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். இதனையடுத்து நிலத்தின் உரிமையாளர் பாஸ்கர் போலீசாருக்கு அஞ்சி காசிநாதனின் சடலத்தை ஏரிக்கரை புதரில் மறைத்துள்ளார். 

மாலை வரை காசிநாதன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர், பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். காசிநாதன் இறந்தது குறித்தும் அவரது சடலத்தை மறைத்தது பற்றியும் காசிநாதனின் தந்தை சுப்ரமணியிடம் நேற்று இரவு பாஸ்கர் கூறியுள்ளார். மகன் இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்ட தந்தை மாரடைப்பால் தனது வீட்டிலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து மணலூர்பேட்டை காவல்நிலையத்தில், சம்பவம் குறித்து பாஸ்கர் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணலூர்பேட்டை போலீசார், காசிநாதன் அவரது தந்தை சுப்பிரமணி இருவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் மின்வேலி அமைத்து காசிநாதன் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததற்காகவும், சடலத்தை மறைத்ததற்காகவும் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில், மின்வேலியில் சிக்கி காசிநாதன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: