×

நீட் தேர்வால் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தரவுகள் திரட்டப்படுகிறது : நீதிபதி ஏ.கே.ராஜன்

சென்னை : நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்துள்ளதாக நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான தமிழக அரசு நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் இதுவரை தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவையும் நியமித்தார்.

இந்த நிலையில், நீட் தேர்வு விவகாரம் குறித்து ஏ.கே ராஜன் தலைமையிலான முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரவீந்திரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன், பள்ளிக்கல்வி செயலாளர் காகர்லா உஷா, சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு ஆகியோர் பங்கேற்றனர். நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய்ந்து இக்குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்க உள்ளது. உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பின் தங்கிய மாணவர்களின் நலனை பாதுகாத்திட தேவையான பரிந்துரைகளை குழு அளிக்கும்.

இதனிடையே ஆலோசனைக்கு பிறகு நீதிபதி ஏ.கே.ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்து உள்ளனர்.நீட் தேர்வின் தாக்கம் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்.நீட் தேர்வால் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தரவுகள் திரட்டப்படுகிறது. 21ம் தேதி நடைபெறும் 2வது கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளதுஎன்றார்.


Tags : A. Q. Rajan , நீதிபதி ஏ.கே.ராஜன்
× RELATED நீட் தேர்வின் தாக்கம் குறித்து நாளை...