ஆன்லைன் கேமில் சிறுவர், சிறுமியரிடம் ஆபாச பேச்சு!: யூ-டியூபர் மதன் வீடியோக்களை முடக்க யூ-டியூப், இன்ஸ்டாகிராமுக்கு போலீசார் பரிந்துரை..!!

சென்னை: யூ-டியூபர் மதனின் வீடியோக்களை முடக்க யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் மதன் என்ற யூ-டியூபர் பற்றி பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருந்தன.  யூ-டியூபர் மதன், மதன் ட்ரிக்ஸ் சேனல் என்ற பெயரிலும்,  மதன் 18+  என்ற பெயரிலும் 2  யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறார். 

இவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்களில் விளையாடும் போது அதை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது குறித்து லைவ்வாக விளையாடிக்கொண்டே ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசும் வீடியோக்களை யூ-டியூப் சேனலில் பதிவிட்டு வந்திருக்கிறார். இதில் சிறுவர்கள், குழந்தைகள் மட்டுமின்றி பெண்கள் உள்ளிட்ட அனைவரையுமே ஆபாசமாக பேசும் வகையில் வீடியோ அமைந்துள்ளது. 

இதுபோன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்களை அவரது யூ-டியூப் சேனலில் பதிவிட்டு வந்திருக்கிறார். இது விளையாடும் சிறுவர்களை கெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்து வருகிறது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசிடமும் புகார் அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து, பப்ஜி மதன் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் மதன் தலைமறைவானதால் அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வி.வி.என். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மதன் மாற்றி கொண்டு வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

மதனின் வீடியோக்களை பார்த்து பல சிறுவர்கள் கெட்டுப்போக வாய்ப்பிருப்பதால் வீடியோக்களை முடக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்ததை அடுத்து போலீசார்  யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர். அதில் மதன் சம்பந்தப்பட்ட வீடியோக்களை உடனடியாக முடக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். 

அதன்படி இன்று அல்லது நாளை அவரது பக்கம் முடக்க வாய்ப்பிருப்பதாக காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக அவரை பிடித்து வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

Related Stories:

>