61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவு!: கடலோர மாவட்டங்களில் மீன்பிடிக்க செல்ல ஆயுத்தம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முடிவுக்கு வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர். ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக விசை படகுகளில் டீசல் நிரப்புதல், பனிக்கட்டிகளை ஏற்றுதல், வலைகளை உலர்த்தி சரிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தடை நீங்கியுள்ள நிலையில், இன்னும் 1 வாரத்தில் மீன்கள் விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், மீன் வரத்தின் அளவை பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆண்டுதோறும் வழங்கப்படும் டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 

விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதை போன்று மீனவர்களுக்கு வங்கிகளில் கடன் உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விசைப்படகுகளை சீரமைக்க தேவையான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்கப்படாததால் மீன்பிடிக்க செல்ல இன்னும் 15 நாட்களுக்கு மேல் ஆகும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை தமிழக கடலோரங்களில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தடைகாலம் இன்றுடன் நிறைவடைவதால் மீன்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

Related Stories:

>