பாணாவரம் பகுதியில் வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனை படுஜோர்

*கண்டுகொள்ளாத காவல்துறை

பாணாவரம் :  தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் பலசரக்கு கடை முதல் பங்க் கடை வரை அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வை பயன்படுத்தி பல்வேறு அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடை விதிவிலக்கு இல்லாமல் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதுவும் தளர்வுகளின் ஒரு பகுதியாக இன்று திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், பாணாவரம் பகுதியில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில மது பாட்டில்கள் ரயில்களில் கடத்தி வரப்பட்டு இப்பகுதியில் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு குவாட்டர் விலை ₹400க்கும், புல் பாட்டில் விலை ₹1,500க்கும் அதிரடியாக  விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பாணாவரம் சுற்றுப்பகுதியில் மதுப்பிரியர்களால்  பயன்படுத்தப்பட்டு வீசப்பட்டு கிடக்கும் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குவார்ட்டர் பாட்டில்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் வெளிமாநில மது பாட்டில் விற்பனை இங்கு களைகட்டியுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Related Stories: