புதிதாக அமைத்து 5 மாதத்தில் மீண்டும் சேதமான சாலை-வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம் : விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தேர் பிள்ளையார் கோயில் தெரு சாலையில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இச்சாலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கே.கே.நகர் வரை இணைக்கும் மிக முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. ஆனால் தற்போது இச்சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும் விழுப்புரம் நகரப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் மழையினால் இச்சாலை முற்றிலும் சிதிலம் அடைந்து உள்ளது. மேலும் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இச்சாலையில் வரும்போது குண்டும், குழியுமாக இருப்பதினால் விபத்துக்கள் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் இச்சாலையில் தெருவிளக்குகள் அவ்வப்போது எரியாததாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆகவே அரசு விரைந்து சாலையை சீரமைத்து, தெருவிளக்குகளையும் சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: