பராமரிப்பின்றி பாழான நயினார்குளம் சாலையில் உருவான ராட்சத பள்ளம்-வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

நெல்லை : நெல்லையில் பராமரிப்பின்றி பாழான டவுன் நயினார்குளம் சாலையில் அதிவேகமாக வரும் கனரக வாகனங்களால் உருவான ராட்சத பள்ளத்தால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி முறையாக சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

 நெல்லை மாநகரில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய் பதிப்பதற்காகவும், பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் அமைக்கும் பணிகளுக்காகவும் பல்வேறு சாலைகள் உடைக்கப்பட்டன. இருப்பினும் இவை முறையாக மூடப்படாமல் அவசர கோலத்தில் அரைகுறையாக மூடப்பட்டன. இதனால் பல்வேறு வீதிகள் மட்டுமின்றி முக்கியச் சாலைகளும் பல்லாங்குழியாக மாறி உள்ளன. அந்தவகையில் நெல்லை டவுன் குற்றாலம் சாலை உடைக்கப்பட்டு ஓராண்டை கடந்த நிலையிலும் சீரமைக்கப்படாமல் அலங்கோலமாக உருக்குலைந்துள்ளது. இதனிடையே பொதுமக்களின் தொடர் புகாரால் பெயரளவுக்கு சீரமைக்கப்பட்ட  ஒரு சில சாலைகளில் மருந்துக்குக்கூட பராமரிப்பு நடக்கவில்லை. இதனால் ஆங்காங்கே சாலையில் ராட்சத பள்ளங்கள் ேதான்றியுள்ளன. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது.

 இதேபோல் நெல்லை டவுனில் பரந்துவிரிந்து காணப்படும் நயினார்குளத்தை ஒட்டி அமைந்துள்ள சாலையும் நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி பாழானது. அவ்வப்போது குடிநீர்த் திட்டப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிக்காக ராட்சத குழிகள் பதிப்புக்காக தோண்டப்படும் நிலையில் பெயரளவுக்கு சீரமைக்கப்பட்டாலும் அது நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை. அத்துடன் இங்கு அதிவேகமாக வரும் கனரக வாகனங்களால் ஒரு சில நாட்களில் சாலையானது மீண்டும் சேதமடைவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இச்சாலையின் அவலம் இப்படியே தொடர்கிறது. இதனால் இந்த சாலையை கடக்கும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. மழை பெய்துவிட்டால் மேலும் சிக்கல் ஏற்படுகிறது. 10 கி.மீ. வேகத்தில் சைக்கிளை விட மெதுவாக செல்லும் நிலை ஏற்படுகிறது.

 காய்கனி பாரம் ஏற்றும் லாரிகள் உள்ளிட்ட ஏராளமான கனரக வாகனங்கள் பயணிக்கும் இச்சாலையில் உருவான ராட்சத பள்ளத்தால் அவதிப்படும் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்டு சீரமைக்க முன்வருவார்களா? என எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>