போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் கிரீன் சர்க்கிள் பூங்கா அளவை குறைக்கும் பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்

*ஜனவரி மாதமே தொடங்குவதாக அறிவித்துவிட்டு அமைதி காப்பதாக குற்றச்சாட்டு

வேலூர் : வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி பூங்காவின் அளவை குறைக்கும் பணியை கடந்த ஜனவரி மாதமே தொடங்குவதாக அறிவித்துவிட்டு, இதுவரை பணிகளை தொடங்காமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூரில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன், பல கட்டங்களாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது.

அதன்படி கிரீன் சர்க்கிள் பகுதியில் பயன்பாடற்ற பூங்காவின் அளவினை குறைத்து, வட்ட வடிவிலான பகுதிகளில் 12 மீட்டர் அளவிற்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் காட்பாடியிலிருந்து வேலூர் நோக்கி செல்லும் வாகனங்களும், சென்னையில் இருந்து வேலூர் வழியாக திருப்பத்தூர் செல்லும் வாகனங்களும் சிரமமின்றி செல்லும். மேலும் கிரீன் சர்க்கிள் பகுதி உட்பட தேசிய நெடுஞ்சாலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையின் இருபுறங்களிலும் உள்ள மழைநீர் வடிகாலானது தற்போதைய சாலை மட்டத்தை விட 1.5 அடி உயரம் அதிகமாக உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் வாகனம் செல்லும் வகையில் சாலைக்கு இணையாக கால்வாய் உயரத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலையின் இருபுறமும் 5 மீட்டர் அகலத்திற்கு வாகனங்கள் செல்ல முடியும். போக்குவரத்து நெரிசலும் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையரகத்தின் மூலம் ஜனவரி 18ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து இருந்தார்.

ஆனால் பொங்கல் பண்டிகையொட்டி பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் சீரமைப்பு பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதும் விரைவில் பணிகள் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த பணியை இதுவரை தொடங்கவில்லை. இதனால் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்படடுள்ளது. போக்குவரத்து நெரிசல் தீர்க்க இதுவரை ஆய்வு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான பணிகளை இதுவரை மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த காலக்கட்டத்தில் இந்த பணியை மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசல் இல்லாமலும், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாமலும் செய்து முடிக்கலாம். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>