×

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையும் வரை மக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

சென்னை : கொரோனா பரவல் குறையும் வரை மக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஓரளவு பாதிப்பு குறைந்தால் மக்கள் நலன் கருதி படிப்படியாக தமிழக அரசு தளர்வுகளை அளித்துள்ளது. இன்று முதல் பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், தேநீர் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள, இ சேவை மையம், கட்டுமான அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்பட அரசு அனுமதி அளித்துவிட்டது. அதன் படி, இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கும் வந்துவிட்டன.

இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் அவர்களை 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஏற்கனவே விமான பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் 2வது அலை தணிந்து வரக்கூடிய நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் கொரோனா தொற்று பரவல் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும்
மக்களின் நலன் கருதி கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். 


Tags : Tamil Nadu , கொரோனா
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...