மிருகண்டா அணையை சீரமைக்க வேண்டும்-கலசபாக்கம் விவசாயிகள் கோரிக்கை

கலசபாக்கம் : பராமரிப்பின்றி உள்ள மிருகண்டா அணையை சீரமைத்து நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கலசபாக்கம் வட்டம், ஜவ்வாது மலையில் மூலக்காடு என்ற காட்டு பகுதியில் கோவில்மலையாறு மற்றும் இடியாறு என்ற இரண்டு ஆறுகள் உற்பத்தியாகி, பின்னர் ஒன்றாக சேர்ந்து மிருகண்டா நதி என்ற பெயருடன் செல்கிறது. இரண்டு ஆறுகள் ஒன்றாக கலக்கும் இடத்திற்கு கீழ் சுமார் 200 மீட்டர் தூரத்தில் மிருகண்டா நதியில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது.

மிருகண்டா நதி பின்னர் மேல்சோழங்குப்பம் கிராமம் வழியாக சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் சமதள பரப்பில் சென்று, எலத்தூர் கிராமம் அருகே செய்யாற்றுடன் கலக்கிறது. செய்யாற்றுடன் சேர்ந்த பிறகு 110 கிலோ மீட்டர் தூரம் சென்று காஞ்சிபுரம் பாலாற்றுடன் கலக்கிறது.

இந்நிலையில், கலசபாக்கம் பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மிருகண்டா அணை மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ளது. இந்த அணையானது தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால், கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், மிருகண்டா அணை முழுமையாக விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வராதது வேதனையாக உள்ளது. இந்த அணை நிரம்பி உபரிநீர் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டால் 3190.96 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயனடைவர்.

 மிருகண்டா அணையில் இருந்து ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாராமல் உள்ளதால் அணை நிரம்பி உபரிநீர் திறந்துவிடும் காலங்களில் உபரிநீர் வீணாகிறது. மேலும், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் இருந்து மிருகண்டா அணைக்கு செல்லும் வழியில் சிறுபாலங்கள் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், பழுதடைந்துள்ள அணையை சீரமைத்து ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் எனவும், அணைக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சுற்றுலா தலமாக்க நடவடிக்கை

மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையில் பூங்கா அமைத்து அணையின் கரையை பலப்படுத்துதல், பழுதடைந்துள்ள இடிதாங்கிகள் சீரமைத்தல், அணையில் அருகாமையில் உள்ள அலுவலக கட்டிடங்களை சீரமைத்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், செய்து சுற்றுலா தலமாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், இதுவரை அவர்களது கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. மேலும், மிருகண்டா அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளுக்கு குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: