செங்கம் தாலுகாவில் அட்டூழியம் பனை மரங்களை வெட்டிக்கடத்தும் சமூக விரோத கும்பல்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கம் : செங்கம் தாலுகாவில் ஏரிக்கரைகள் மற்றும் சாலையோரங்களில் வளர்ந்துள்ள பனை மரங்களை வெட்டிக்கடத்தும் சமூக விரோத கும்பல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு உள்ளிட்டவை உடலுக்கு நன்மை ஏற்படுத்தும் உணவு பொருட்களாக விளங்குகின்றன. பனை ஓலைகள் கூரை வேயவும், பல்வேறு கைவினை பொருட்கள் செய்யவும், முதிர்ந்த பனை மரங்கள் மரச்சட்டங்கள் செய்யவும் பயன்படுகின்றன. பனை மரங்கள் தமிழகத்தின் கற்பக விருட்சமாக கருதப்படுகின்றன.

எனவே, நமது வாழ்வியலோடு தொடர்புடைய பனை மரங்களை நடவும், ஏற்கனவே வளர்ந்துள்ள மரங்களை முறையாக பராமரிக்கவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், செங்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம், ஏரிக்கரைகள், குளக்கரைகள், கோயில் பகுதிகள் என பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் வளர்ந்துள்ளன.

இந்த மரங்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லாததால் வெட்டிக்கடத்தப்பட்டு வருகின்றன. வழக்கமாக வனப்பகுதிகளில் காட்டு மரங்களை வெட்டிக் கடத்தும் சமூக விரோத கும்பல் தற்போது ஊருக்குள் வளர்ந்திருக்கும் பனை மரங்களையும் வெட்டி, வீட்டு உபயோகம் மற்றும் செங்கல் சூளைகளுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

அதேபோல், கிராம ஊராட்சி, வனத்துறை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் வளர்ந்துள்ள பனை மரங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

எனவே, செங்கம் தாலுகாவில் ஏரிக்கரை, குளக்கரை உட்பட பல்வேறு இடங்களில் வளர்ந்துள்ள பனை மரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கணக்கெடுத்து அவற்றை கிராம ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மேற்பார்வையில் முறையாக பராமரிக்க வேண்டும். பனை மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>