போதை சாக்லெட் கொடுத்து பள்ளி மாணவிகளை சீரழித்த சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவில் வழக்கு -டிஜிபி திரிபாதி விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு

சென்னை : ‘பாபாவின் ஆசி பெற்றால் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பாய்’ என கூறி பள்ளி ஆசிரியைகள் உதவியுடன் கடந்த 15 ஆண்டுகளாக மாணவிகளுக்கு போதை சாக்லெட் கொடுத்து ‘சிவசங்கர் பாபா’ பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது போக்சோ உட்பட 3 சட்டப்பிரிவிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

பத்மா சேஷாத்திரி பள்ளி அசிரியர் மீது அப்பள்ளி மாணவிகள் தைரியமாக புகார் அளித்தனர். இதனால் உத்வேகம் அடைந்த, சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள்,  சிவசங்கர் பாபா மீது தைரியமாக பாலியல் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து  தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி  நேரடியாக பள்ளியில் விசாரணை நடத்தினர். மேலும், தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கவுரி அசோகனும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்த முன்னாள் மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபா ஆசீர்வாதம் செய்வது போல் தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. மேலும், இது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சம்பவம் நடந்து வருவதும் மாணவிகளிடம் நடத்திய ரகசிய விசாரணையில் தெரியவந்தது.

இதைதொடர்ந்து தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 11ம் தேதி சுஷில் ஹரி இண்டர் நேஷ்னல் பள்ளியின் நிர்வாகி வெங்கட்ராமன், சிவசங்கர் பாபாவின் வழக்கறிஞர் ஆகியோர் மட்டும் ஆஜராகி மாணவிகளின் பாலியல் தொடர்பாக விளக்கம் அளித்தனர். அப்போது ல் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. அவர், ஆன்மிக சொற்பொழி ஆற்றுவதற்காக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் இருப்பதாகவும், திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். ஆனால் பாலியல் புகார் குறித்து முறையாக விளக்கம் அளிக்கவில்லையாம்.  இந்நிலையில், முன்னாள் மாணவிகள் 14 பேர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது அடுக்கடுக்கான புகார்கள் அளித்துள்ளனர்.

மேலும், காவல் துறை சார்பில் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் புகார் அளிக்க தெரிவித்த வாட்ஸ் அப் எண்ணிற்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளனர். அந்த புகாரில், ‘9 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளி வளாகத்தில் தங்கிப் படிக்கும் மாணவிகள், இரவு நேரங்களில் சாமியாருடன் ஒரே அறையில் தங்க வேண்டும்  என்று  ஆசிரியைகள் கட்டாயப்படுத்தியதாகவும்,  அப்படி தங்கும் மாணவிகளில் சிலரை மட்டும் தேர்வு செய்து அந்த மாணவியை மட்டும் தனது அறைக்கு வரவைத்து அவரது உடைகளை கழற்ற வைத்து மசாஜ் செய்து ‘நான் கிருஷ்ணன் நீ கோபிகா’ என்று கூறி இனி உன் வாழ்வில் எல்லாம் மாறி விடும் என்றும், உன் வலிகள் பறந்தோடி விடும் என்றும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதேபோல், இரவு வகுப்பின் போது மாணவிகளுக்கு குளிபானம் என்று மதுபானம் மற்றும் போதை சாக்லெட் கொடுத்து மாணவிகளுக்கு போதை தலைக்கேறியதும் சாமியார் சிவசங்கர் பாபா சொல்படி கேட்டு நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக கண்ணீருடன் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் படி 3 தனித்தனி வழக்காக சாமியார் சிவசங்கர் பாபா மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகிகள் மீது போக்சோ உட்பட 3 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார் வாக்கு பதிவு செய்துள்ளனர். சாமியார் சிவசங்கர் பாபா மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் அடுத்தடுத்து புகார் அளித்து வருவகின்றனர்.

அதேநேரம், சாமியார் சிவசங்கர் பாபா தனது சீடர்கள் மூலம் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ய கூறி அதை பார்த்து ரசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பலர் தொழிலதிபர்கள் என்பதால் சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதேநேரம் சாமியார் சிவசங்கர் பாபா தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்த வழக்கு விசாரணை நடத்துவதற்கும் சிவசங்கர் பாபாவை கைது செய்ய ஏதுவாக காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து சாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு மற்றும் ரகசிய விசாரணயின் போது மாணவிகள் அளித்த வாக்குமூலம் உள்ளிட்ட ஆவணங்கள் உடனே சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் சாமியார் சிவசங்கர் பாபாவை கைது செய்யவதற்கான அனைத்து பணிகளையும் சிபிசிஐடி போலீசார் எடுத்து வருகின்றனர்.

பொதுத் தேர்வுக்கு முன் ‘ஆசிர்வாதம்’

முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில், ‘‘பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 11, 12ம் வகுப்பு  படிக்கும் மாணவிகள் பொதுத்தேர்வுக்கு முன்பும் பிற ஆன்மிக நிகழ்வு  நாட்களிலும் சிவசங்கர் பாபாவை கண்டிப்பாக மாணவிகள் சந்தித்து ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று பள்ளியின் ஆசிரியைகள் வலியுறுத்தி அழைத்து செல்வார்கள்.  அப்போது தான் மாணவிகளை சிவசங்கர் பாபா ஆசிர்வாதம் என்ற பெயரில் தனிதனியாக  தனது அந்தரங்க அறைக்கு அழைத்து சென்று, ஆசிர்வாதம் பெற வந்த மாணவிகளின் உடல் பாகங்களை அருவருக்கதக்க வகையில் தொட்டு தனது பாலியல் வக்கிரங்களை செயல்படுத்தி வந்ததாகவும், பாபா தனது அறையில் வெளிநாட்டு மதுபானங்கள்,  சாக்லெட்டுகளை கொடுத்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகவும் புகார் அளித்திருந்தனர்.

கிருஷ்ணனின் ‘அவதாரம்’

செங்கல்பட்டு கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பத்தில் 20 ஆண்டுகளாக ‘சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி’ இயங்கி வருகின்றது. இதன் நிறுவனர் பிரபல நடன சாமியார் சிவசங்கர் பாபா(72). ஆன்மிக சொற்பொழிவு மூலம் பிரபலமான இவர், தனக்கு தானே ‘கடவுள்’ என்று அறிவித்து கொண்டவர். இவரது ஆன்மிக சொற்பொழிவால் ஈர்க்கப்பட்ட சுஷில் என்ற பக்தர் இலவசமாக 62 ஏக்கர் நிலம் வழங்கினார்.

அதில்தான், சுஷில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளியை நடத்தி வருகிறார். தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் வீட்டு பிள்ளைகள் மற்றும் சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் பிள்ளைகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர். பள்ள வளாகத்திலேயே ராமராஜ்ஜியம் என்ற ஆடம்பரமான நகரை உருவாக்கினார். அதில் 300 குடும்பங்கள் தங்கலாம்.  தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறி பக்தர்கள் முன்பு ஆனந்த  நடனமாடுவார். ஆன்மிக சொற்பொழிவால் நாடு முழுவதும் தனது அரசியல் செல்வாக்கால் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்தவர் சிவசங்கர் பாபா.

லாரி ஏஜென்சி முதல் சாமியார் வரை

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த நாராயண சர்மா, லட்சுமி தம்பதியரின் மகன் சிவசங்கர். இவர் 1949ம் ஆண்டு பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த சிவசங்கரன், 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மண்ணடி பகுதியில் சிவசக்தி என்ற பெயரில் லாரி சர்வீஸ் மற்றும் பார்சல் சர்வீஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். அவருடைய அலுவலகத்தில் அம்மன் சிலை ஒன்றை வைத்து வழிபட்டு செய்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வந்தார்.

குறி கேட்க வந்த பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் இருந்து சிவசங்கர் விரட்டியடிக்கப்பட்டார். பிறகு, பெசன்ட் நகர் பகுதியில் சிறிய அளவில் ஆன்மிக சொற்பொழிவு மையத்தை தொடங்கிய தனது பெயரை ‘சிவசங்கர் பாபா’ என்று தனக்கு தானே அறிவித்து கொண்டார். தனது சொற்பொழிவு பலத்தால் தொழிலதிபர்கள் பலரை தன் வசப்படுத்தி நீலாங்கரையில் 3 ஏக்கர் பரப்பளவில்  ஆசிரமம் ஒன்று அமைத்தார். அதன் மூலம் உயர் அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்களை தனது சீடர்களாக மாற்றினார்.

தொலைக்காட்சிகளில் யோகா, தியானம் பற்றி வகுப்பு எடுத்தார். விவாத நிகழ்ச்சியில் யாகவா முனிவருடன் அடிதடி சண்டை ஏற்பட்டு மேலும் பிரபலம் அடைந்தார் சிவசங்கர் பாபா. பின்னர் அவரது தீவிர பக்தர் சுசில் மேத்தா என்பவர் தனக்கு சொந்தமான கேளம்பாக்கம் அருகே உள்ள 62 ஏக்கர் நிலத்தை அவரது ஆசிரமத்திற்கு இலவசமாக கொடுத்தார். இதுபோல் தொழிலதிபர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை நிலங்கள் மற்றும் பணத்தை சிவசங்கர் பாபாவுக்கு வாரி கொடுத்தனர்.

பிறகு ‘நான் தான் கிருஷ்ணரின் மறு பிறவி’ என்று அறிவித்து கொண்டு ஆன்மிக சொற்பொழிவின் போது ஆனந்த நடனமாடுவார். அவரை பின்பற்றும் சீடர்கள் சிவசங்கர் பாபாவை ஒரு கட்டத்தில் கடவுளாக வழிபட தொடங்கினர். பவுர்ணமி தினங்களில் மூலவர் பெருமாள் சிலைக்கு அருகில் சிவசங்கர் பாபா அமர வைக்கப்பட்டு பெருமாளுக்கு அணிவிக்கப்படும் கவச உடைகள் சிவசங்கர் பாபாவுக்கும் அணிவிக்கப்பட்டு கடவுள் சிலைக்கு செய்யப்படும் பால், பழ அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>