2 குழந்தைகள் பெற்றதை மறைத்து 3வது திருமணம் செய்து ₹6 லட்சம் பறித்த பெண்ணுக்கு போலீஸ் வலை

திருமலை : 2 குழந்தைகள் பெற்றதை மறைத்து 3வது திருமணம் செய்து ₹6 லட்சம் பறித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள விஜயபுரம் அடுத்த நரபுராஜூ கண்ரிகாவை சேர்ந்தவர் சுனில்குமார்(29). இவர் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி சத்தியநாராயணபுரத்தில் வசித்து வந்தார். அப்போது,  ஏடிபி  நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சுஹாசினியுடன் சுனில்குமார் நட்பாக பழகி உள்ளார். இந்த நட்பு காதலாக மாறியது.இதையடுத்து, சுஹாசினி தான் அனாதை என்று கூறி கடந்தாண்டு டிசம்பரில் சுனில்குமாரை திருமணம் செய்து கொண்டார். சுனில்குமாரின் குடும்பத்தினர் சுஹாசினிக்கு 3 சவரத்தில்  தங்க நகைகளை வாங்கி கொடுத்தனர்.  

சில மாதத்திற்கு முன்பு சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உடல் நலம் பாதித்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி 2 கட்டமாக ₹6  லட்சம் பெற்றார்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி  இதையறிந்த சுனில்குமாரின் பெற்றோர் சுஹாசினியிடம்  பணத்தை என்ன செய்தாய் என்று கேட்டுள்ளனர். அப்போது முதல் சுஹாசினி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஆதார் அட்டையில் உள்ள முகவரி  அடிப்படையில் சுனில்குமார் சுஹாசினியை தேடியுள்ளார்.

அப்போது, சுனில்குமாருக்கு அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. அதில், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் செய்து 2 மகள் இருப்பதை கண்டுபிடித்தார்.  இதற்கிடையே, சுஹாசினி ஐதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தை தருவதாக சுனில்குமாருக்கு போனில் கூறினார். போலீசாரை நாடினால்  உனக்கு தான் பிரச்னை வரும் என்று மிரட்டியுள்ளார். மேலும்,  வெங்கடேஷை தவிர  ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரை  திருமணம் செய்ததாக கூறி புகைப்படங்களை  செல்போனிற்கு அனுப்பினார்.  

இதுகுறித்து சுனில்குமார் திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். அதன்பேரில், எஸ்ஐ பரமேஷ்வர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், சுஹாசினி வெவ்வேறு பெயரில் திருமணம் செய்துள்ளாரா?, வேறு யாராவது சுஹாசினியின் வலையில் சிக்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்.

Related Stories:

>