பொதுமக்கள் ஆர்வம் வந்த வேகத்தில் காலியான கொரோனா தடுப்பூசி

விருதுநகர் : கொரோனா தொற்று பரவல் துவங்கிய 2020ம் ஆண்டு மார்ச் முதல் விருதுநகர் மாவட்டத்தில் பரவல் வேகம் அதிகமாகி, ஆக.2020ல் குறைய துவங்கியது. 2வது தொற்று பரவல் கடந்த இரண்டு மாதங்களாக வேகம் காட்டி வருகிறது.தடுப்பூசி மீதான அச்சம் காரணமாக மக்கள் தயக்கம் காட்டினர். ஆனால், கொரோனா 2ம் பரவலில் அதிகரித்த உயிரிழப்புகளால் மக்கள் தடுப்பூசி போட ஆர்வத்துடன் கூட்டம், கூட்டமாக முன்வருகின்றனர். ஆனால், ஒன்றிய அரசு கடந்த ஒரு மாதமாக பாஜ ஆளுமை இல்லாத மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 42,500 தாண்டிய நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 39ஆயிரமாக உயர்ந்துள்ளது. 487 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் குறைந்து வருகிறது.

மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி சுகாதார மாவட்டங்களில் 91 மையங்கள் மூலம், இதுவரை 2.80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.கடந்த ஒருவாரமாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிய நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் மாவட்டத்திற்கு 14 ஆயிரம் கோவிசீல்டு மற்றும் 3 ஆயிரம் கோவாக்சின் என 17 ஆயிரம் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.மக்களின் ஆர்வம் காரணமாக கடந்த இரு தினங்களில் 91 மையங்கள் மூலம் 17 ஆயிரம் தடுப்பூசிகளில் 98 சதவீத தடுப்பூசிகள் நேற்று மாலையுடன் போட்டு முடிக்கப்பட்டுள்ளது. இனி தடுப்பூசி புதிதாக வந்தால் மட்டுமே போட முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: