கொரோனா ஊரடங்கு முடிந்ததும் பொதுமக்களுக்கு களப்பணியாற்ற அரசு பேருந்துகள் தயார்-ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளனம் அறிவிப்பு

தஞ்சை : ஊரடங்கு முடிந்தவுடன் மக்களுக்கு களப்பணியாற்ற கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், தொழிலாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக ஏஐடியூசி போக்குவரத்துக்கழக சம்மேளனம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களை பாதுகாக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. கொரோனா தொற்றின் தொடர்பை தடுத்திட கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மே 9ம் தேதி வரை அனைத்து பகுதிகளுக்கும் பேருந்தை இயக்கி வந்துள்ளது.ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகின்ற நேரத்தில் மே 22, 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும், கிராமங்கள் வரை இரவு, பகல் என முழுமையாக இரண்டு நாட்கள் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், பணியாளர்கள், தொழிலாளர்கள் 2 நாட்களும் முழுமையாக இரவு, பகல் என அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து மக்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு செல்ல பணி புரிந்தனர். இந்நிலையில் ஊரடங்கு ஜூன் 21ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள பேருந்துகளை கழுவி சுத்தம் செய்யப்பட்டும், பணிமனை வளாகத்தின் உள்ளேயே தினமும் பேருந்துகளை இயக்குவது, பேட்டரி, டயர், கிரீஸ் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுடன், பேருந்துகள் அனைத்தும் கிருமிநாசினி சுத்தம் செய்தும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அரசு பணிகளுக்கு செல்கின்ற அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளும் பணி முடித்து வந்து கிருமிநாசினி சுத்தம் செய்தும், பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் தஞ்சாவூர் புறநகர், தஞ்சை நகர கிளைகள் 1, 2, திருவையாறு, பட்டுக்கோட்டை, கும்பகோணம் என்று சுமார் 10 பணிமனைகள் உள்ளது. புறநகர் பேருந்துகள் 300, நகர பேருந்துகள் 213 என மொத்தம் சுமார் 513 பேருந்துகளும், நாகப்பட்டினத்தில் 600 பேருந்துகள், திருச்சி, கரூர் கழகத்தில் சுமார் 1,200 பேருந்துகள், புதுக்கோட்டை, காரைக்குடி கழகம் என கும்பகோணம் மண்டலத்தில் சுமார் 3,200 பேருந்துகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு மக்கள் பணியாற்ற தயார் நிலையில் உள்ளது.

கும்பகோணம் உள்ளிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மேலாண்மை இயக்குனர்கள், பொதுமேலாளர்கள் ஆலோசனை, அறிவுரையின்பேரில் அரசு பேருந்துகள், விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தலைமை அலுவலகம் உள்ளிட்ட கிளை அலுவலகங்களில் அரசின் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு அலுவலகப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா கால ஊரடங்கு முடிந்தவுடன் அரசு எந்த நேரத்தில் அறிவித்தாலும் தயார் நிலையில் பேருந்துகளும், தொழிலாளர்களும் களப்பணியாற்றிட காத்திருக்கின்றனர் என ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளனம் மாநில துணைத்தலைவர். துரை.மதிவாணன் தெரிவித்தார்.

Related Stories: