ஆண்டிபட்டி அருகே அரசு மருத்துவமனை குப்பையை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு-குப்பை கிடங்குக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குப்பைகளை கொட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினசரி சேகரமாகும் மருத்துவக்கழிவுகளை தனியார் நிறுவனம் எடுத்து அழித்து வருகிறது. ஆனால், மருத்துவமனையில் சேகரமாகும் குப்பைகளை ஆண்டிபட்டி அருகே, அம்மச்சியாபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வருகின்றனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மருத்துவமனை இடம் என்பதால் மருத்துவமனை நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருகிறது.

இந்நிலையில், நேற்று மருத்துவமனை குப்பைகளை லாரிகள் மூலம் கொட்ட வந்தபோது, அங்கு கூடிய பொதுமக்கள் லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘கொரோனா காலத்தில் மருத்துவமனை குப்பைகளை கொட்டுவதால் நோய் பரவும் என பொதுமக்கள் புகார் கூறினர். மேலும், தற்போது காற்று அதிகமாக வீசுவதாலும், குப்பைகளை குழி தோண்டி போடாததாலும் குப்பைகள் பறந்து ஊருக்குள் மற்றும் விவசாய நிலத்திற்குள் விழுவதாக கூறினர். எனவே, குப்பை கிடங்கை சுற்றி சுவர் எழுப்ப வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: