நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 5 மணி வரை தனிகடைகள் செயல்பட அனுமதி உள்ள போதும் ஞாயிற்றுகிழமையான நேற்று மதியத்திற்கு பிறகு மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா இரண்டாவது அலை துவங்கியது. தொற்றை கட்டுப்படுத்த கடந்த மாதம் 10ம் தேதி இருவார கால முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், ஒருவார கால தளர்வில்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்தது. இதனால், கடந்த வாரம் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு கடைகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அரசு அனுமதியளித்தது.

வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தவறான காரணங்கள் கூறி இ-பதிவு செய்து நீலகிரிக்கு வந்ததாலும் தொற்று அதிகரிக்கும் சூழல் உருவானதால் அதனை தவிர்க்கும் பொருட்டு இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.  ஊரடங்கு காரணமாக, நீலகிரியில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளது. இதனிடையே மாலை 5 மணி வரை தனிக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மதியம் 1 மணிக்கு பிறகு ஊட்டி நகரில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்தது. அதற்கேற்றார் போல் மழையும் பெய்ததால் நகரம் வெறிச்சோடியது.

தொடர்ந்து 5 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதேபோல், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய இடங்களில் காவல்துறையினர் தற்காலிக தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த வாகனங்களை நிறுத்தி அவற்றை பறிமுதல் செய்ததுடன் வழக்குபதிவு செய்து அபராதமும் விதித்தனர். இந்த சூழலில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. நீலகிரியில் தொற்று பரவல் குறைந்திருந்தாலும், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள், ஆட்டோக்கள் இ-பதிவுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: