எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா பதவி யாருக்கு?: இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..!!

சென்னை: ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி மோதல், சசிகலா ஆடியோவால் சலசலப்பு என பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்க்கட்சி தலைவர் கொறடா தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கிறார்கள். 

வரும் 21ம் தேதி சட்டசபை கூடவிருப்பதால் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. 

கொறடா பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா ஆடியோ தொடர்பாகவும், இதனால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. எனவே அதிமுக தொண்டர்கள் இடையே இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Related Stories:

>