காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 32 கிரவுண்ட் நிலம் அமைச்சர் முன்னிலையில் அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பு

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 32 கிரவுண்ட் நிலம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நேற்று திரும்ப ஒப்படைக்கப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. இவற்றில் கதவு எண் 768ல் 44.5 கிரவுண்ட் பரப்பில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இவற்றில் 2010ம் ஆண்டு 12.5 கிரவுண்ட் இடம் கோயில் வசம் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டது.

99 ஆண்டு குத்தகை காலம் முடிவுற்ற பின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78ன் கீழ் சுவாதீனம் உத்தரவு பெறப்பட்டு பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் மூலம் வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கில் கோயிலுக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. அதன் அடிப்படையில் இப்பள்ளிக்கூடத்தை தங்களால் தொடர்ந்து நடத்த இயலாது என கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிறுவனத்தினர் தெரிவித்து நேற்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலரிடம் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலரால் 32 கிரவுண்ட் இடம் மற்றும் பள்ளி கட்டடங்களுடன் சுவாதீன ஒப்படைக்கப்பட்டு கோயில் வசம் முழுமையாக சுவாதீனம் பெறப்பட்டது.

Related Stories:

>