தண்ணீர் தேங்கிய சாலையில் அமரவைத்து ஒப்பந்ததாரர் மீது குப்பையை கொட்டிய சிவசேனா எம்எல்ஏ: வைரலான வீடியோவால் பரபரப்பு

மும்பை: மழைநீர் தேங்கிக் கிடந்த சாலையில் ஒப்பந்ததாரரை அமர வைத்து அவர் மீது குப்பையை கொட்டிய சிவசேனா எம்எல்ஏ.வின் செயல், சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பெய்து வரும் பருவமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இங்குள்ள சாந்திவிலி பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. அப்பகுதியை பார்வையிட வந்த சிவசேனா எம்எல்ஏ திலீப் லாண்டே, இந்த காட்சியை பார்த்ததும் ஆவேசத்துடன் ஒப்பந்ததாரரை அழைத்தார். அவரை தண்ணீர் தேங்கிய சாலையில் அமர வைத்து, குப்பையை எடுத்து வந்து கொட்டினார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் நடந்தது.

இந்த பரபரப்பு வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து லாண்டே கூறுகையில், ‘‘மக்கள் குப்பை பையை சாலையில் போடுகின்றனர். இதனால், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடைகள் அடைத்துக் கொள்கிறது. இவற்றை சீர் செய்ய வேண்டியது எனது கடமை. ஆனால், குப்பையை அகற்ற வேண்டிய ஒப்பந்ததாரர் குப்பைகளை அகற்றி, வடிகால்வாய்களை சீர் செய்யவில்லை. அவர் கடமை தவறி விட்டார். அதனால்தான், இப்படி செய்தேன்,’’ என்றார். அவரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: