கொரோனா மருந்து காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்: உலக தலைவர்களுக்கு மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: ‘கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்,’ என்று உலக தலைவர்களுக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரிட்டனில் உள்ள கர்பிஸ் பே பகுதியில் ஜி-7 மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளின் தலைவர்களுக்கும் சீனாவுடன் பொருளாதார ரீதியாக போட்டியிடுவதற்கும், முக்கிய பிரச்னைகள் குறித்து சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்தார். இந்ந மாநாட்டில் நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடியும் காணொலி மூலமாக உரையாற்றினார்.

அதில் அவர், ‘‘கொரோனா தொற்றை இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து சந்தித்தனர். உலகளவில் மக்களின் சுகாதார மேம்படுத்தும் கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற நோய் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க, உலகளவில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இப்போதுள்ள நிலையில், இது மிகவும் கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. கொரோனா வைரசால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க, ‘ஒரு பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும். மேலும், கொரோனா மருந்துகளின் காப்புரிமையை பல்வேறு நாடுகள் வைத்துள்ளன. இதை காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். இதன்மூலம், அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றை தடுக்க, அனைத்து மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக இருக்கும். இதற்கு, ஜி-7 நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும்,’’ என்றார்.

* ஜி-7 மாநாடு நிறைவு

பிரிட்டனில் நடந்த 3 நாள் ஜி-7 மாநாடு நேற்றுடன் முடிந்தது. கடைசி நாள் மாநாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக உலக மக்களுக்கு தடுப்பூசி போடுவது, பெரிய நிறுவனங்கள் தங்கள் நியாயமான வரிகளை செலுத்தச் செய்வது, பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது என அனைத்து தலைவர்களும் உறுதி எடுத்தனர்.

Related Stories: