ஆவின் நிறுவனத்தில் ரத்து செய்த 636 பணியிடங்களுக்கு வெளிப்படையாக நியமனம் நடைபெறும்: பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டி

பவானி: ஆவின் நிறுவனத்தில் ரத்து செய்யப்பட்ட 636 பணியிடங்களுக்கு வெளிப்படையான பணி நியமனங்கள் செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஆவின் ஒன்றியத்தில் பால் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் குறித்து அமைச்சர் நாசர் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களுக்கு சேர வேண்டிய பால், காய்கறி, பழங்கள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பது குறித்து தமிழகமெங்கும் அமைச்சர்கள், எம்எல்ஏகள் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையான பால், தடையின்றி கிடைப்பது குறித்து உற்பத்தி, குளிரூட்டும் நிலையத்துக்கு வருதல், பதப்படுத்துதல், பொதுமக்களுக்கு கிடைத்தல், லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு அமலாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கண்டறிடப்பட்ட குறைகள் அனைத்தும் களையப்படும்.

ஆவின் பாலகங்களில் ஆவின் தயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பிற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு பால் கொள்முதல் நிலுவை தொகை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையால் பால் வரத்து அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 12 லட்சம் லிட்டர் விற்பனையான நிலையில் தற்போது 15 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் பகுதியில் மேலும் ஒரு லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் பால் ஒன்றியங்களில் செய்யப்பட்ட முறைகேடான நியமனங்கள் உறுதியானதால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், 176 நிர்வாக பணியிடங்கள் உட்பட 636 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். பணி நியமனங்கள் மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறும்.  இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.

Related Stories:

>