டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் நீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பால் மின் உற்பத்தியும் துவங்கியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது, அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 6 ஆயிரம் கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை முதல் 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 96.81 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 96.33 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 60.18 டிஎம்சியாக உள்ளது. முதலில் 8 கண் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து மின் உற்பத்திக்காக சுரங்கம் மின் நிலையம் மற்றும் அணை மின் நிலையம் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மின் உற்பத்தியும் துவங்கியுள்ளது.

Related Stories:

>